புரட்டாசி மாத சிறப்புமிகு விரதங்கள்!

புரட்டாசி மாத சிறப்புமிகு விரதங்கள்!

ன்னிரு தமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு தனிப்பெருமை உண்டு. ஆம், இது பெருமாளுக்கு மிக உகந்த மாதமாகும். ஆடி மாதம் எப்படி அம்மன் வழிபாட்டுக்கு மிக உகந்ததோ, அதேபோல் புரட்டாசி மாதமும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. மகாளயபட்ச காலத்தில் இது மத்யாஷ்டமி திதியாகும். புரட்டாசி மாதத்துக்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். ஆகவே, புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்குரிய மாதமாகிறது. புரட்டாசியில் அனுசரிக்கப்படும் சனிக்கிழமை விரதம் மட்டுமின்றி, இன்னும் சில விரத வழிபாடுகளும் புரட்டாசி மாதத்தில் உண்டு. அதுபோன்ற சில விரத வழிபாடுகளைக் காண்போம்.

அமுக்தாபரண விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில் உமா-மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இந்த விரதத்தின்போது பன்னிரண்டு முடிச்சுகள் கொண்ட சரடை (கயிறை) வலது கையில் கட்டி கொண்டு விரதமிருந்தால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்த நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய ஸித்தி உண்டாகும்.

சஷ்டி – லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வ மங்கலங்களையும் அருள்வாள்.

மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமை நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் அனைத்தும் கிடைக்கும்.

ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.

கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, செவிளி நிற பசுவை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இந்த விரதத்தை மேற்கொள்ள ஸித்திகளை கைகூடும்.

மஹாளய பட்ச விரதம்: மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான காலம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். இக்காலத்தில் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வந்து நம்மைக் காண வருவதாக ஐதீகம். இந்த நாட்களில் விரதமிருந்து தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுவதால், பித்ருகடன், பித்ரு தோஷம் நீங்குவதோடு, வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்க முன்னோர்கள் ஆசீர்வதிப்பர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com