AI tea shop
AI tea shop

ஆளில்லா AI டீக்கடை எப்படி சாத்தியம்?

இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் டீக்கடை ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதை டிஜிட்டல் டீக்கடை எனக் கூறுகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் என்ற பகுதியில் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் டிஜிட்டல் டீக்கடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் டீக்கடையாகும். இதில் டீ மாஸ்டர், பணியாளர் என யாருமே இல்லை. தேநீர் பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான தேனீரை AI தொழில்நுட்பத்திடம் கேட்டுப் பெற்று சுவைக்கலாம். 

மேலும் அந்த கடையில் கொடுக்கப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்வது மூலமாக, தங்களுக்கு விருப்பமான தேநீர், பிஸ்கட், தண்ணீர், தின்பண்டங்கள் போன்றவற்றை வாங்க முடியும். இந்த அதிநவீன டீக்கடையை ஆந்திர மாநில அமைச்சரான கங்குலா கமலாக்கர் மற்றும் கரீம்நகர் மேயர் சுனில் ராவ் ஆகியோர் திறந்து வைத்தனர். 

இதுகுறித்து பேசிய இந்த டீக்கடை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் குமார், " தற்போதைய காலகட்டத்தில் டீக்கடை மாஸ்டர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள். ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பியவற்றை வாங்கி சாப்பிட முடியும். தற்போது தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மொத்தம் 600 தானியங்கி டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் எல்லா இடங்களிலிருந்தும் இதேபோன்ற கடையைத் திறப்பதற்கான முன்பதிவுகள் எங்களிடம் நடந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் உள்ள எல்லா தேநீர் பிரியர்களுக்கும் கொண்டு சேர்ப்பது எங்கள் கனவு" என அவர் கூறினார். 

இந்த ஆளில்லா டீக்கடையை மக்கள் அனைவரும் வியந்து பார்க்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இந்த கடை பார்க்கப்படுகிறது. மேலும் இதேபோல பல துறைகளில் தானியங்கி மயமாக்கப்பட்ட விஷயங்கள் வரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்காக நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com