சிறுவனின் நோயை கண்டுபிடித்த ChatGPT!

ChatGPT
ChatGPT

எல்லா துறைகளிலும் தற்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மருத்துவத்துறையிலும் இந்தத் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத 17 வயது சிறுவனின் நோயை ChatGPT  கண்டுபிடித்துக் கூறியுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற சிறுவன் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான பல் வலியால் அவதிக்குள்ளாகி வந்துள்ளான். இதனால் அந்த சிறுவனின் வளர்ச்சியும் குன்றிப்போன நிலையில், அந்த நோயுடன் அதிகம் போராடியுள்ளான். எனவே அந்த சிறுவனை அருகில் உள்ள டாக்டர்களிடம் அழைத்துச் சென்று காட்டியபோது, அவர்களால் இது என்ன வகை நோய் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

சிறுவன் ஏதாவது உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே கடவாய் பல்லில் மிகுந்த வலி உண்டாகியுள்ளது. இதற்குக் காரணம் என்னவென்று டாக்டர்களால் உறுதிப்பட கண்டறிய முடியவில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு மருத்துவர்களும் மற்றொரு மருத்துவரை பரிந்துரை செய்ததன் பேரில், சுமார் 17 டாக்டர்கள் வரை அச்சிறுவனை சோதித்துப் பார்த்தும் அந்த நோயைக் கண்டறிய முடியவில்லை. 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுவனின் தாயார், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT-யிடம் இதுகுறித்து கேள்வி கேட்டுள்ளார். அந்த தொழில்நுட்பத்துடன் தன் மகனுக்கு உண்டான அறிகுறி, இதுவரை டாக்டர்களிடம் காட்டிய மருத்துவ அறிக்கைகள் போன்ற அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இந்தத் தரவுகள் அனைத்தையும் வைத்து ChatGPT சிறுவனுக்கு 'டெதர்ட் கார்ட் சின்றோம்' எனப்படும் அரிய நரம்பியல் நோய் இருப்பதாக கண்டறிந்து கூறியது.

இதைத்தொடர்ந்து அந்த சிறுவனை முறையான ஒரு நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து தற்போது குணமடைந்து வருகிறான். இப்படி பல மருத்துவ நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கண்டறிந்த செய்தி மருத்துவ உலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com