
ஜூலை 11, 1979 இரவு இந்தியாவின் மறக்க முடியாத நாள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது விண்வெளி ஆய்வு வரலாற்றில் உலகையே அச்சப்பட வைத்த ஒரு அசாதாரண நிகழ்வு அன்று நடந்தது.
1973 முதல் 1979 வரை பூமியை சுற்றி வந்த அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப், பூமியினுள் அனைவரும் எதிர்பாராத வகையில் மீண்டும் நுழைந்தது. இதைக் கண்டு உலகமே அஞ்சிய நிலையில் அது இந்தியாவில்தான் மோதும் என்ற தகவல் வெளிவந்ததும், இந்திய மக்கள் உட்பட உலகமே அதிர்ச்சிக்குள்ளானது.
ஆறு வருடங்களாக பூமியை சுற்றி ஆய்வு செய்து வந்த நாசாவின் ஸ்கைலேப் விண்வெளி நிலையத்தின் பணி முடிவுக்கு வந்ததால், மீண்டும் அதை நமது பூமிக்கு கொண்டு வருவதற்கான பணியில் நாசா இறங்கியது. இதை முதலில் பசுபிக் பெருங்கடலில் விழும்படியாகத்தான் நாசா திட்டமிட்டது. ஆனால் வளிமண்டலத்தின் அதிகப்படியான இழுவை காரணமாக ஸ்கைலேபின் நுழைவு எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத வகையில் இருந்தது.
ஆனால் பல விஞ்ஞானிகள் ஸ்கைலேபின் எரிந்த துண்டுகள் இந்தியாவில் விழுந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறினார்கள். இதனால் இந்திய மக்கள் அனைவருமே பயந்துகொண்டிருந்த நிலையில், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விழும் என அறிவிப்புகள் வெளியானது. ஸ்கைலேபின் பாகங்கள் வானிலிருந்து எரிந்து கொண்டே விழும் காட்சியை இந்தியாவிலிருந்து பார்க்கலாம் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பிட்ட நாளன்று ஸ்கைலேப் எரிந்து கொண்டே பிரகாசமாக விழும் காட்சியைக் கண்டு வியந்தனர்.
அது பார்ப்பதற்கு அழகாக இருந்தது என்றாலும், விண்வெளி குப்பைகள் மற்றும் சரியான வழிகாட்டுதலின்றி, பூமிக்குள் விண்கலன்கள் கொண்டு வருவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய கவலையை அதிகரித்தது. இந்தியாவுக்கு அருகே ஸ்கைலேப் விழுந்தாலும், அதனால் யாருக்கும் காயமோ, சேதமோ ஏற்படவில்லை. இது உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஏஜென்சிகளுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கான அவர்களின் அணுகுமுறையும் முற்றிலுமாக மாறியது.
ஸ்கைலேப் பூமியில் விழுந்த நிகழ்வு விண்வெளியின் பிரமிக்க வைக்கும் அதிசயங்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை நினைவூட்டும் விதமாக இன்றளவும் இருக்கிறது. மேலும் விண்வெளியில் நாம் எப்படி பொறுப்புடன் நடக்க வேண்டும் என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்தியது.