
வழக்கமாக விண்வெளியில் இருக்கும் கற்கள்தான் பூமியில் விழும். ஆனால் சுமார் 10,000 வருடங்களுக்கு முன்பாக பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்ற கல் மீண்டும் பூமியையே வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
விண்வெளியை ஏராளமான விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்படி சுற்றிக் கொண்டிருக்கும் கற்கள் பூமியை நோக்கி அதி வேகத்தில் வரும். ஆனால் நம்முடைய வளிமண்டலம் நம் பூமிக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதால், பூமியினுள் நுழையும்போதே எரிந்து சாம்பலாக மாறிவிடுகிறது. அல்லது சிறிய மணல் துகள்களாக மாறியே பூமியில் விழுகிறது. ஏதோ சில நேரங்களில் தான் பெரிய அளவில் இருக்கும் கற்கள் பாதி எரிந்தும் எரியாத நிலையில் பூமியில் விழுகிறது.
அப்படி பூமியில் விழுந்த கல் ஒன்றை ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா பாலைவனத்தில் சில நாட்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஒரு கருங்கலின் மீது சாக்லேட் ஊட்டினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது அந்த கல். முதலில் இது சாதாரண விண்கல்லாக இருக்கும் என ஆய்வு செய்து பார்த்த விஞ்ஞானிகள், மற்ற விண் கற்களை விட இது வித்தியாசமாக இருப்பதை அறிந்ததும் ஆச்சரியமடைந்தனர்.
ஏனென்றால், இது பார்ப்பதற்கு பூமியில் உள்ள கல் போலவே இருக்கிறது. ஆனால் அந்தக் கல் விண்வெளியிலிருந்து விழுந்திருக்கிறது. சரி, அப்படியானால் பூமியிலிருந்து அந்த கல் எப்படி விண்வெளிக்கு போனது என ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது, அதில் கிடைத்த முடிவுகளை வைத்து இரண்டு விதமான கூற்றை அவர்கள் முன்வைக்கின்றனர்.
முதல் கூற்றாக சொல்வது, இந்தக் கல் பூமியில் நடந்த எரிமலை வெடிப்பின்போது விண்வெளிக்கு பறந்திருக்கும் என்றும், இந்த செயல்பாடு 10000 வருடங்களுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படி எரிமலை வெடித்தால் விண்வெளிக்கு கல் போகும் என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஒரு எரிமலை வெடிக்கும்போது அதிகபட்சமாக 58 கிலோ மீட்டர் உயரம் வரை கற்கள் தூக்கியெறியப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இரண்டாவது கூற்றாக, 10000 ஆண்டுகளுக்கு முன்பு ஏதாவது சிறிய கோள் பூமியில் வந்து மோதி இருக்கலாம். அப்போது இந்தக் கல் பூமியிலிருந்து விண்வெளிக்கு வீசப்பட்டிருக்கும் எனக் கூறுகின்றனர். ஆனால் பூமியிலிருந்து விண்வெளிக்கு போன கல், எப்படி மீண்டும் பூமிக்கே திரும்ப வந்தது என யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அதிசயக் கல்லை பூமியிலிருந்து விண்வெளிக்கு தானாகவே சென்று தானாகவே திரும்பிய 'பூமராங் கல்' என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.