
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜ் செயலியான வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட், ஸ்மார்ட் வாட்ச் பயனர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி ஸ்மார்ட் வாட்சிலேயே வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கான ரிப்ளை செய்து கொள்ளலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே தற்போது ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறைந்த விலை முதல் அதிகபட்ச விலை வரை வித்தியாசமான ஸ்மார்ட் வாட்சுகள் தற்போது சந்தையில் கிடைக்கிறது. குறிப்பாக அதில் இருக்கும் அம்சங்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டது எனலாம். இதற்கு முன்னர் வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களை உங்கள் ஸ்மார்ட் வாட்சில் நோட்டிபிகேஷனாக பார்க்க மட்டுமே முடியும். அதற்காக எவ்விதமான ரிப்ளையும் கொடுக்க முடியாது.
சமீப காலமாகவே whats app அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை தன் பயனர்களுக்குக் கொடுத்த வண்ணம் இருக்கிறது. அதன்படி ஸ்மார்ட் வாட்ச் வைத்திருப்பவர்கள் அவர்களின் போனைத் தொடாமலேயே வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு இனி ரிப்ளை கொடுக்கலாம் என்ற புதிய அம்சத்தை whatsapp அறிமுகம் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் வாட்ஸ் அப்பின் Wear OS அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டது. இது முதன் முதலில் பீட்டா பயனர்களுக்காக வெளியிடப்பட்டது. தற்போது இந்த அம்சம் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. ஒருவேளை உங்களுக்கு அப்டேட் கிடைக்கவில்லை என்றால் விரைவில் நீங்கள் அதைப் பெறுவீர்கள்.
இந்த புதிய அப்டேட் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களுக்கான Watch OS எப்போது வெளிவரும் என்று எந்தத் தகவலும் வெளிவரவில்லை. வாட்ஸ் அப்பில் இந்த புதிய அப்டேட் wear OS 3 கொண்ட எல்லா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் பொருந்தும். இந்த புதிய அப்டேட்டை நீங்கள் இன்ஸ்டால் செய்த பிறகு உங்கள் ஸ்மார்ட் வாட்சில் இருந்து வாட்ஸ் அப்பில் இருக்கும் எல்லா பயனர்களுடனும் மெசேஜ்களை பகிர முடியும்.
மேலும் வாய்ஸ் மெசேஜ், சாட்டிங், இமோஜி போன்றவற்றையும் நீங்கள் அனுப்பலாம். இது மூலம் வாட்ஸ்அப் அழைப்புகளையும் உங்களது ஸ்மார்ட் வாட்ச்சில் நீங்கள் பயன்படுத்த முடியும். அதற்கு உங்கள் ஸ்மார்ட் வாட்சில் இன்டர்நெட் ஆதரவு இருக்க வேண்டும்.