பரவசமூட்டும் கனடா நேஷனல் டவர் - (CN Tower)

பரவசமூட்டும் கனடா நேஷனல் டவர் -  (CN Tower)

னடா செல்பவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று டொராணோ நகரில் உள்ள சி.என்.டவர் என்று சொல்லப்படும் கனடா நேஷனல் டவர். ஆங்கிலத்தில் டொராண்டோ என்று எழுதினாலும், சரியான உச்சரிப்பு டொராணோ என்கிறார்கள் கனடா நாட்டு மக்கள்.

டொராணோ நகரை சாலை வழியாகவோ அல்லது ரயில் மார்க்கமாகவோ நெருங்கும் போது, வானுயர நிமிர்ந்து நிற்க்கும் இந்தக் கோபுரத்தைக் காணலாம். இந்த கோபுரத்தின் மொத்த உயரம் 553 மீட்டர் (1815 அடிகள்). 1973ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 1976ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்ட இந்தக்  கோபுரம் சுமார் 34 வருடங்கள் உலகத்தின் மிக உயரமான கோபுரம் என்ற புகழை பெற்றிருந்தது. 2010ஆம் வருடம், துபாயின் புர்ஜ் காலிஃபா அந்தப் பெருமையை தட்டிச் சென்று விட்டது.

இந்தக் கோபுரத்தைக் கனடாவின் தொலைத்தொடர்பு கோபுரம் என்றும் சொல்லலாம். பதினேழு கனடா தொலைக்காட்சி மற்றும் எஃப்.எம் நிலையங்களின் செயல்பாட்டிற்கு இந்த கோபுரம் உதவுகிறது. கனடாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாகப் பார்க்கப்படும் இந்த கோபுரத்திற்கு, வருடத்திற்கு சுமார் இரண்டு மில்லியன் ( இருபது இலட்சம்) சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

கோபுரத்தின் மேல்பகுதியிலிருந்து டொராணோ நகரையும் அதன் சுற்றுப் புறங்களையும் பார்ப்பதற்கு இரண்டு பார்வை மேடைகள் உள்ளன. முதல் மேடை 346 மீட்டர், (1136 அடிகள்), 113 அடுக்கு மாடிகள் உயரம் என்று சொல்லலாம். கண்ணாடி மேடை (க்ளாஸ் ஃப்ளோர்) என்ற பெயர் கொண்ட இந்தப் பார்வை மேடையின் சுவர்கள் கண்ணாடியினால் ஆனவை. பார்வை மேடையை அடைவதற்கு 11 எலிவேட்டர்கள் உள்ளன. நான்கு பக்கங்களும் கண்ணாடிச் சுவர்களால் ஆன எலிவேட்டரின் வேகம் மணிக்கு 22 கிலோ மீட்டர். அதாவது, கீழ் தளத்திலிருந்து முதல் பார்வை மேடைக்கு, எலிவேட்டர் 58 வினாடிகளில் கொண்டு சேர்க்கிறது.

இன்னும் அதிகமான உயரத்தில் சென்று பார்க்க விரும்புபவர்களுக்கு “ஸ்கைபாட்” என்று இன்னொரு பார்வை மேடை. அதன் உயரம் 447 மீட்டர் (1465 அடிகள்), 147 அடுக்கு மாடிகள் உயரம். இங்கு நின்று பார்க்கும் போது காற்றில் கோபுரம் லேசாக அசைவதை உணர முடியும். சுமார் அரை மீட்டர் கோபுரம் காற்றில் அசைகிறது. வட அமெரிக்கப் பகுதியில், அதிக உயரத்தில் அமைந்துள்ள பார்வை மேடை “ஸ்கைபாட்” மட்டும்தான். வானம் மேகமூட்டம் இல்லாமல் இருக்கும் போது, 160 கிமீ. தூரம் வரை, அதாவது நயாகரா நீர்வீழ்ச்சி, மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் வரை பார்க்க முடியும். வருடத்திற்கு 75 முறை இந்த கோபுரத்தை மின்னல் தாக்குவதாகக் கூறுகிறார்கள்.

ஸ்பைடர் மேன் போலக் கோபுரத்திலிருந்து தொங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு “எட்ஜ் வாக்” (கோபுரத்தின் விளிம்பில் நடப்பது) என்ற வசதியுண்டு. அதாவது கோபுரத்திற்கு வெளிப்புரத்திலுள்ள கூரையில் தொங்கிய படி நகரைப் பார்க்கலாம். உயரம் 356 மீட்டர், (1168 அடிகள்), 116 அடுக்கு மாடிகள் உயரம். பாதுகாப்பிற்கான சகல உபகரணங்களுடன் தொங்கியபடி நகரைப் பார்க்கலாம்.

இந்த கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மற்றொரு அம்சம் “360 ரெஸ்டாரண்ட்” என்ற சுற்றும் சிற்றுண்டிசாலை. எழுபத்திரண்டு நிமிடங்களில் இந்த சிற்றுண்டிசாலை ஒரு முழுச்சுற்றை முடிக்கிறது. அமர்ந்து உணவருந்தியபடியே, விண்ணைத் தொடும் கட்டிடங்கள் நிறைந்த டொராணோ நகரின் அழகை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் கண்டு ரசிக்கலாம்.

இந்த கோபுரத்தின் கூரையில் எல்.சி.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கணினியின் கண்காணிப்பில் மிளிரும் இந்த விளக்குகள் 16.7 மில்லியன் வண்ணங்களைக் கொடுக்கும் வகையில் வடிவமைத் துள்ளார்கள். தினமும், இரவில் இந்த அலங்கார விளக்குகள் ஒளியூட்டப்படுகின்றன. அதைத்தவிர முக்கியமான நாட்களில் விளக்குகள் ஒளியூட்டப்படும். தீபாவளி, ஹோலி ஆகிய இந்திய பண்டிகைகளுக்கு கண் கவரும் எல்சிடி விளக்குகளைக் காணலாம்.

சி.என்.டவரின் கீழ் பகுதியில் பெரிய நினைவுப் பரிசுக் கடை இருக்கிறது. இந்த அற்புதமான கோபுரத்திற்கு வந்ததன் நினைவுச் சின்னமாக  வாங்க எண்ணற்ற வகையான பரிசுப் பொருட்கள் குவிந்துள்ளன. கனடா செல்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களில், சி.என்.டவரும்   ஒன்று என்று சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com