
-விக்னேஷ் பகவதி
ஓவியம்; தமிழ்
காலையில் பத்து மணி.. டிங்.டிங்…… ‘இரயில் பயணிகளின் கவனத்திற்கு… குருவாயூர் டூ சென்னை எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வந்து கொண்டிருக்கிறது.’
ராஜீக்கு இதுவே முதல் இரயில் பயணம். இதற்கு முன்பு ரயிலில் கால் தடமே படாதவள், இன்று ஒரு நாள் முழுவதும் குடும்பத்துடன் பயணம் செய்யப் போவதை எண்ணி மனதிற்குள் ஒரே ஆனந்தம் கொண்டாள்.
நடைமேடையில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்தாள். அப்போது அருகில் இருந்து பலத்த துர்நாற்றம் வீசியது. அருகில் ஒருவர் குளிர்பானத்தில் மதுவை கலந்து நடைமேடையில் அமர்ந்து அருந்திக்கொண்டிருந்தார். இவளுக்கு குமட்டல் தாங்க முடியவில்லை. மெதுவாக நகர்ந்து, பிள்ளையை தூக்கிக்கொண்டு எழுந்து நின்றுகொண்டாள். சற்று ஆழ்ந்த யோசனைக்கு சென்றாள்… ஒரு சில நிமிடங்கள் அருகில் நின்ற நமக்கே இந்த நாற்றம் தாங்க முடியவில்லை! வாழ்நாள் முழுவதும் இவருடன் ஒரு குடும்பம் எப்படி வாழ்கின்றது? ரயில் தூரத்தில் வருவதை கண்டு பெட்டிகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஏறினாள்.
முதல் முதலாக கால் தடம் வைப்பதை கண்டு கால் சிறிதாக நடுங்கியது. ஏறும்போதே பதட்டம். பஸ்ஸில் பயணம் செய்யும்போது பிடிப்பது போல் இரு கைகளும் மேலே பெல்ட்டை பிடித்தவாறு நிற்பதைக் கண்டு பயணிகள் நகைத்தனர். இவள் பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை.
ஒவ்வொன்றையும் வினோதமாகக் கண்டாள். மணிக்கு ஒரு முறை வரும் டி சாய்… என்ற குரலும், வடை சமோசா… வடை சமோசா…. என்ற பெண்ணின் குரலும், வெஜ் பிரியாணி…. சிக்கன் பிரியாணி…. என்ற வடநாட்டு வியாபாரி குரலும், ரயில் பெட்டிகளை கலகலக்க வைத்தன. வடநாட்டு வியாபாரிகள் உணவு பெட்டிகளை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டும், கைகளில் ஏந்திகொண்டும் சிரமப்படுவதை கண்டு பரிதாப பட்டாள். இவர்களின் கழுத்து எலும்புகளின் நிலை என்னவாகும் என்றபடி உணவு வியாபாரியின் கேள்விக்கு வேண்டாம் என்று மறுத்தபடி தான் கொண்டு வந்த கூட்டாஞ்சோற்றை தன் குடும்பத்தாருக்கு பகிர்ந்து தானும் உண்டாள்.
வயதான நோயாளி ஒருவர் தவழ்ந்து வந்து தர்மம் கேட்பதை கவனித்து தான் கொண்டு வந்த உணவில் இரண்டு பொட்டலங்களைக் கொடுத்து மகிழ்ந்தாள்.
“அப்பாடா நான் தப்பிச்சேன் கூட்டாஞ்சோறுல இருந்து” என்றபடி மனைவியைப் பார்த்து சொல்லமாக சிரித்தான் கணவன்.
சிறிது நேரம் கழித்து கழிப்பிடம் சென்றவள் போன வேகத்தில் திரும்பினாள். தூய்மை இல்லா இவ்விடத்தில் எப்படி மக்கள் உபயோகிக்கிறார்கள் என்ற யோசனையில் சற்று நேரம் திகழ்ந்தாள்.
இரவு நேரமானதும் குழந்தை வீறிட்டு அழுதது. ராஜியின் மாமியார் தன் நூல் சேலையை மிடில் பெல்ட்களில் இறுகக் கட்டினாள். ராஜி ரயில் கம்பியில் இருந்து தொங்கும் தொட்டிலை வினோதமாகக் கண்டாள். ரயிலின் தாலாட்டில் குழந்தை குதூகலமாய் உறங்கியது.
“பிள்ளையை தொட்டில்ல போட்டுட்டு தூங்காத! இங்க ஆளுங்க எப்படின்னு சொல்ல முடியாது. முன்ன மாதிரி போலீஸ் ரொம்ப ரவுண்ட்ஸ் வர்றது கிடையாது. முழிச்சிருந்து பிள்ளைய பாத்துக்கோ” என்று கூறிவிட்டு அனைவரும் உறங்கினர். இவள் மட்டும் தொட்டில் சேலையினைப் பிடித்தபடி கைபேசியை பார்த்துக் கொண்டு விழித்திருந்தாள்.
சமூகத்தின் மீதான அவநம்பிக்கையை சிந்தித்தபடி சிறிது கண்ணயர்ந்தாள். அப்பர் பெர்த்தில் உறங்கிய கணவன் இறங்கி வந்து,
“நீ தூங்கு இனி நான் பாத்துக்குறேன்”னு சொல்லிட்டு ராஜிக்கு பெட்ஷீட்டை போர்த்திவிட்டான். அயர்ந்து போன ராஜி அடுத்த நிமிடமே கண்ணயர்ந்தாள்.
காலை விடிந்தது. மீளவிட்டான் ஸ்டேஷன் வரும்போதுதான் தூக்கத்தில் இருந்து மீண்டாள். தான் ரயில் தாலாட்டில் உறங்கிய நெகிழ்ச்சியில் தரை இறங்கினாள். சேலைத் தொட்டில் தாலாட்டில் உறங்கிய தன் குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தபடியே!