முகங்கள்!

முகங்கள்!

ஓவியம்; லலிதா

ல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது அந்த ஒருநாள் வரும் வரை. 

கிழிக்கப்பட்ட நாட்காட்டிக்கு என்ன தெரியும் ஒவ்வொரு நாளின் தாங்குகனம்?அது பாட்டுக்கு அதன் கடமையைக் கழித்து விட்டுச் செல்கிறது. அதில் ஏதேனும் ஒரு குழந்தையின் வரவு இருக்கலாம். ஒருவரின் பயணம் இருக்கலாம். ஒருவரின் அவமானம் தோய்ந்திருக்கலாம். ஒருவரின் பசி பொதிந்திருக்கலாம். இவை எவற்றையும் அறியாது தன்போக்கில் தூக்கிலிட்டுக் கொள்கிறது ஒரு நாள்.

அந்த நாட்காட்டியின் இன்றைய நாளில் என் சுகவீனம் பொதிந்திருந்தது கூட அதற்குத் தெரியாமல் சுவற்றில் தொங்கிய படி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. 

போனவாரம் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு  சாப்பாடாக் கொடுத்து அனுப்பினேனே! இந்த வாரம் நமக்கு ரிடர்ன் வருமோ? மனசுக்குள் ஒரு ஆசை எட்டிப்பார்க்கப் படுத்துக் கிடந்தேன். 

ம்ஹும். இரண்டு நாளாய் யாரும் எட்டிக் கூடப் பார்க்க வில்லை. பிறகு தான் தெரிந்தது எட்டிப் பார்த்தாலே ஒட்டிக் கொள்ளுமாம். அது ஏன் சென்ற வாரம் எனக்குத் தெரிய வில்லை? தேவைப் படுமென்று அம்முகத்தைச் சேமித்துக் கொண்டேன்.

மூன்று மாதங்களுக்கு முன்னால் ப்ளாட்டில் ஒருவருக்கு அவசர உதவி செய்ய வேண்டி வந்தது. அடடா பாவம் என்று, என் குடும்ப வேலைகளைக் கூடப் புறம் தள்ளி விட்டு முன் நின்று செய்தேன். ஒரு வேளை அவர்கள் வீட்டில் இருந்து போனாவது செய்து எப்படி இருக்கேன்னு கேட்பாங்களோ?  நினைத்துக் கிடந்தேன்.

வரும் வழியில் என் கணவரிடம் சொன்னாராம் அப்பெரியவர். "வைரஸ் காய்ச்சலா? நீ கூட உன் மனைவி கிட்டக்கப் போயிடாத! உன் உடம்பு ஜாக்கிரதை!" என்று. குடும்பத்திற்குள் ஊடாடும் மூன்றாம் முகத்தை அறிந்து விலக்கி வைத்தேன்.

"அம்மா! எங்க ஸ்கூலில் முகங்கள் அப்படிங்கற தலைப்புல ப்ரொஜெக்ட் கொடுத்து இருக்காங்க!" பெண் லதா குடுகுடுவென்று ஓடி வந்தாள்.

"அப்படியா? அதென்ன முகங்கள்? டிசைன் டிசைனா வரையணுமா?" அவளிடமே பதிலை வரவழைக்க முயன்றேன்.

"ஆம்ம்மா.. கண்ணு ஒரு சைஸு, மூக்கு ஒரு சைஸு, வாய் ஒரு சைஸுன்னு!"  முகத்தை அஷ்டகோணலாய் வைத்துக் கொண்டு சிரித்தாள்.

"புறத்தோற்றம் அவ்வளவு முக்கியமா லதா? இப்போ என்னை எப்படி ஜட்ஜ் பண்ணுவ? என் தோற்றத்தை வைத்தா?"

"நீ என் அம்மாம்மா! உன்னை எப்படி தோற்றத்தை வைத்து ஜட்ஜ் பண்ணுவேன்? நீ தான் நான்! நான் தான் நீ!"

"அது கவிதைடி கண்ணு. அம்மா என்னும்  நான் உனக்கு என்னவாய் தெரிகிறேன்? என் முகம் எது?"

அம்மா ஏதோ சொல்லவருகிறாள் என்று விளையாட்டுத் தனத்தை விட்டு  நிமிர்ந்து உட்கார்ந்தாள் லதா.

"அம்மாங்கற நீ எனக்கு அன்பு முகமாத் தெரியற!"

"உன் அப்பாக்கு?'

" மனைவிங்கற உரிமை முகம்!"

"ம்ம். இப்படி எண்ணற்ற முகம் இருக்கு. நமக்கு முன் ஒரு முகம், பின் ஒரு முகம். உதவி வேண்டுமானால் ஒரு முகம்  உதவி கிடைத்தபின் ஒரு முகம், நிராகரிப்பில் ஒரு முகம்,  நீ வர வேண்டும் என்றால் ஒரு முகம், பழிவாங்க ஒரு முகம், பாசத்துக்கு ஒரு முகம்,  வெறுப்பில் ஒரு முகம், விருப்பில் ஒரு முகம்.."

"ஆக ஒவ்வொரு குணத்துக்கும் ஒரு முகமா அம்மா?"

"ஆமா லதா! மனிதர்கள் ஒரே போல் இருப்பதில்லை. ஒரு நேரத்துக்கு ஒரு முகம் காட்டுவார்கள்."

"முகமறிந்து பழகணும் அப்போ!" சிரித்தாள் லதா.

"நாம், நம் முகம் மாற்றாது பழகணும் என்பது அதை விட முக்கியம் கண்ணு. மாறாத அன்பு செலுத்தணும். முடியுமா?"

"அதெப்படிம்மா? ஒருவர் எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியுமா? மாறாத அன்பு கொண்டா? இம்பாஸிபிள்! என் குணம் உனக்குப் பிடிச்சதால நீ என்னை நல்லவள்ன்னு சொல்வ! அதே அடுத்தவங்களும் சொல்வாங்கன்னு என்ன நிச்சயம்மா? அவங்களுக்கு என்னைப் பிடிக்காமப் போகலாம்!"

"போகலாம்..ஆனா நீ மாறாம ஒரே விதமான அன்பைத் தானே எல்லோரிடமும் தர?! அந்த அன்புக்கும் முகம் இருக்கே!"

"என் முன்னாடிப் பேசும் ஒரு முகம் போல் பின்னாடிப் பேசும் முகம் இருப்பதில்லை அம்மா!"

"அதான் கண்ணு . ஆனா நாம பின்னாடி பார்க்கக் கூடாது. முன்னோக்கிப் பார்த்துப் போயிக்கிட்டே இருக்கணும். போற வழியில் அன்பெனும் பூக்களைத் தூவு. அம்முகம் பெருகிப் பல முகமாகட்டும். மறந்தும் வெறுப்பின் விதையை வெளிப்படுத்தி விடாதே. வேதனையின் முகம் விகாரமானது. என்னிக்கும்  முள்ளாய் நிற்கும்."

"அப்போ முகங்கள் என்னும் இந்த ப்ரொஜெக்டில் நான் வரையப்போவது நம்மைச் சுற்ற உள்ள முகங்களா அம்மா?" லதா தலை சரித்துக் கேட்டாள்.

"நம்மைச் சுற்றின்னா? நாம் உதவி பண்ணி நமக்கு உதவி பண்ணாது செல்லும் நம்மைச் சுற்றி இருப்பவர்களா? அவர்கள் முகம் உனக்கெதற்கு? அவர்கள் அவர்களுக்கான முகங்களில் வாழ்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள நமக்கு ஒரு முகம் தேவைப் படுகிறது. எனக்கு இந்தக் காய்ச்சல் முகம் போல!"

"அப்போ இனி அவங்க வந்து ஹெல்ப் கேட்டா செய்ய மாட்டியா அம்மா?"

"செய்யாம?"

"அவங்கதான் உனக்கு ஒண்ணும் செய்யலையே! நீயும் அதே மாதிரி இருந்துட்டுப் போயேன்!"

"இப்போ தானே சொன்னேன் லதா! என்னிடம் இருப்பது வெறுப்பின் விதைகள் இல்லை. அன்பின் விருட்சங்கள்.  அன்பைக் கொடுக்கிறேன்..அன்பைப் பெற முடியவில்லை என்றாலும்."

லதாவின் வாய் தான் என்னிடம் பேசிக் கொண்டிருந்தது. கை பாட்டுக்கு வரைந்து கொண்டிருந்தது. நல்ல ஓவியர் அவளென்று எனக்குத் தெரியும் என்பதால் அவள் வரைவதில் நான் குறுக்கிட வில்லை.

"ம்ம்.சொல்லும்மா! முகங்கள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையா இருக்கு இல்ல?!"

"பின்ன? அப்படி இல்லன்னா அடையாளமே இல்லாம எல்லாம் ஒரே மாதிரி நிக்கும்."

"அதான்! அதேதான்! அதே தான்ம்மா! அவரவர் குணமே அவரவர் முகத்துக்கான அடையாளம். சரியா? பாயிண்டுக்கு வந்துட்டேனா? அப்போ.. குணக்கேடுகள் இருந்துட்டுப் போகட்டுமே. அப்போ தானே அகங்காரங்கற குணம் வெளியே தெரியும். அறுசுவைல கசப்பு தெரியற மாதிரி!"

"இருக்கட்டும் லதா. இருக்கட்டும். இருக்கட்டுமே!" தெளிந்தேன் நான்.

இப்போது எனக்கு உறுத்தலில்லை. என்னால் செய்யப்பட்ட உதவி என்னால் செய்யப்பட்டவையே. பதிலுக்கு யாரும் செய்ய வில்லையா? வேண்டாம். எதிர்பார்ப்பில்லை.. அதற்காக அன்பெனும் முகத்தைக் கழட்டி அகங்கார முகம் சேமித்தேனே. சே!

கொட்டிய மழையின் பின் தெளிந்த வானமாய் நிமிர்ந்தேன்.

"டொட்டொடைங்க்.. " லதா தான் வரைந்து முடித்ததைத் திருப்பிக் காண்பித்தாள்.

"அன்பே முகமாய்!" அருமையான தலைப்பில் அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தேன் நான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com