அப்பாவின் தியானம்

சிறுகதை
அப்பாவின்  தியானம்

ஓவியம்: தமிழ்

ரவு ஒன்பது மணி. மாலையில் ஆறு மணிக்குப் பிறகு, மூன்றாவது முறையாக படுக்கையறைக்குள் நுழைகிறேன்.  படுக்கையின் மேல் கிடந்த காய்ந்த துணிமணிகள், விரைப்புடன் என்னைப் பார்த்து, "வா! வா!" என கெஞ்சின.

 
அவசர அவசரமாக இஸ்திரி போட வேண்டியதை அதற்கான கூடையிலும், துண்டுகளை அலமாரியில் அதற்கான இடத்திலும், திணித்தேன். ரெண்டே நிமிடங்களில் வேலை முடிந்தது... இதற்குத்தான் இந்தத் துணிகளை இவ்வளவு அலைக்கழித்தேனா... துணிமணிகள் மிகவும் டல்லடித்தன. என்னைப் போலவே அவை என் அப்பாவைத் தேடுகின்றனவோ?

அப்பாவின் நினைவலைகள் என்னைச் சூழ்ந்தன...

கல்யாணம் ஆகி, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தேன். தடபுடலாக சாப்பாடும் வரவேற்பும் இருந்தது. "அப்பா ரிட்டயர் ஆனது ரொம்ப சவுகரியமாக இருக்குடி! எல்லா வேலையிலும் ஹெல்ப் பண்றார்டி" என்றாள் அம்மா. அம்மா சந்தோஷமாக இருப்பது கண்டு மனம் குளிர்ந்தது. ’பாவம் அம்மா… ஜாலியாக இருக்கட்டும்' என நினைத்தேன். அப்பா என்னென்ன வேலைகள் செய்கிறார் என பார்க்கவோ, கேட்கவோ முற்படவில்லை...

அடுத்தமுறை சென்றபோது, அம்மாவுடன் நீண்ட நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். "அப்பா துணி மடிக்கிறார். பார்த்தியா?" என்றாள்.


"இல்லையே! இதில் என்ன பெரிய விசேஷம்" என்றேன்.

"நன்னா கவனிடி…" என்றாள், தன் சிறு கண்கள் மலர, என் காதுக்குள்.

அப்பா துணிகளைப் படுக்கை மேல் பரத்தி வைத்துக் கொண்டார். சிறு துணிகளான உள்ளாடைகள், ரவிக்கை போன்றவற்றை தனியாகவும், துண்டுகள் தனியாகவும், உடுப்புகள் தனியாகவும் பிரித்தார். உள்ளாடைகள், பிளவுஸ்கள் போன்றவற்றை ஒரு டப்பாவில் போட்டார். வேஷ்டி, துண்டு, புடைவை போன்றவற்றை நன்றாக நீவி விட்டு, சுருங்கிய பார்டரை அழுத்தி பிரித்துவிட்டார். பலமுறை அழுத்தித் தடவி, பிறகு மடித்து அழுத்தினார். சுமார் பதினைந்து நிமிடங்கள் அதை செய்தார். நாங்க பார்த்ததைக்கூட கவனிக்கவில்லை. "வேற வேலை இல்லை அப்பாவுக்கு... இந்தச் சின்ன விஷயம் அம்மாவை இப்படிக் கவர்கிறதே!! அப்பா மேல் அம்மாவுக்கு அவ்வளவு காதல் போலும்!" என்றே எண்ணினேன். அப்பாவின் இந்தச் செயலை ரசித்த அம்மாவே என்னை வியப்பூட்டினாள்.

வேலை! வேலை! என அலுவலக வேலையை கட்டி அழுதுகொண்டிருந்த அந்தக்காலத்து சின்சியர் சிகாமணி அவர். அதனால் வீட்டு வேலைகள் எதுவும் செய்து நான் பார்த்ததே இல்லை. எல்லாம் கையில் கிடைக்கும். ஆனால், ஓய்வு பெற்ற பின், காய் நறுக்குவது, பால் காய்ச்சுவது, துணிகள் மடித்து வைப்பது போன்ற சில வேலைகளைத் தனதென்று சுவீகரித்துக்கொண்டார். மெதுவாக அவர் செய்யும் எல்லா வேலையையும் கவனிக்க ஆரம்பித்தேன். தினந்தோறும் பால் காய்ச்சும்போது, அதனருகிலேயே நின்று, கண்ணும் கருத்துமாக, முதல் முறை புது வீட்டுக்கு வந்தவுடன் பால் காய்ச்சும் சிரத்தையுடன் காய்ச்சுவார். அவர் பாலை வழிய விட்டு நான் பார்த்ததேயில்லை. அதே போலத்தான் அவர் செய்யும் எல்லா செயல்களும்.

அம்மாவின் மறைவினால் நிலைகுலைந்து போனவரை, சில காலம் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். அப்போதும் அவர் இந்த வேலைகளைத் தொடர்ந்தார். என் துணிகள் மடிப்பதைப் பார்த்த என் கணவர், "அங்க பாரேன்... அவர் துணிமணிகளை மடிக்கிறாரா? இல்ல தியானம் பண்றாரா?" என வியப்பார்.

கொரோனா காலகட்டத்தில், ‘அப்பாவின் வேஷ்டி’ என்ற பிரபஞ்சனின் சிறுகதையைப் படித்தேன். எனக்கு என் அப்பா துணி மடிப்பதுதான் சட்டென நினைவுக்கு வந்தது. அப்பாவின் அருகில் அமர்ந்து அவர் துணி மடிப்பதைப்
பலமுறை ரசித்தேன். நான் ஏதேனும் பேச முற்பட்டால், "இரு. இரு. ரெண்டு துணிதான். முடிச்சுட்டு வரேன்" என்பார். ‘மடித்துக்கொண்டே பேசினால், துணி கோவிச்சுக்குமா என்ன?’ என்று மனதில் தோன்றியதைக் கேட்கமாட்டேன்.


சில நாட்களில், துணி மடிப்பதை நிறுத்திவிட்டு, "நான் அப்புறம் மடிச்சுக்கிறேன். நீ என்னன்னு சொல்லும்மா" என்பார். இன்று இவரை மடக்கியே தீருவது என நினைத்து, "செஞ்ச வேலையவே திரும்ப திரும்ப செய்யறது போர் அடிக்கலையாப்பா? எப்படி முதல் தடவை போல பண்ற?" எனக் கேட்டேன். இதற்கான பதில் கண்டிப்பாக அப்பாவிடம் இருக்காது என்றே தோன்றியது.
"வேலை இல்லாமல் இருந்தா போர் அடிக்கணும்… எப்படித்தான் உங்களுக்கு எல்லா வேலையும், போர் அடிக்கறதோ. முதல்ல அத சொல்லு" என எதிர் கேள்வி போட்டார்.

பல பணிகள் செய்யும் இந்த அவசர யுகத்தில், தியானம் மாதிரி நினைத்து வேலைகளை மனம் ஒன்றி செய்து பார்ப்போமே... சாதாரண செயல்களை அசாதாரண முறையில் செய்த அப்பா, ஒரு சாமான்யரே அல்ல.

அசாதாரணமானவர். ஒரு கர்மயோகி. இந்த ஞானம் அவர் இறந்த பிறகாவது கிட்டியதே. நாமும் அப்பா மாதிரி ஓரிரெண்டு வேலைகளைச் செய்துபார்த்தால் என்ன?.

இன்று ஆறு மணிக்கே துணிமணிகள் என் கையில் சிக்கின. அப்பா மாதிரியே பரத்தி வைத்துக்கொண்டு அமர்ந்தேன். உள்ளே வந்த என் பெண் 'அம்மா! நீ ட்ரை பண்ணாத… உனக்கு இதெல்லாம் செட் ஆகாது" என்றாள். சிந்தையும் மனதும் வேறு எங்கோ இருந்தது. அங்கே வந்த என் கணவர், "உன் அப்பாவின் பெண்ணா நீ?" என்றார். துணிமணிகள் என்னைக் கண்டு கெக்கலித்ததுபோல் தோன்றியது.

‘ஒரு நாள் நானும்  அந்தக் கலையைக் கற்பேன்' என மனதில் சூளுரைத்தேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com