போராளி!

போராளி!

பூனை ஒன்று ரோட்டில் பார்த்தேன். வால் அறுந்து மொட்டையாக இருந்தது. காதுக்கு அருகில் பழைய 25 பைசா அளவிற்கு மன்டைஓட்டில் ஒரு ஓட்டை. அதிலிருந்து சீழ் வழிந்தது. முன் காலில் பலத்த காயம். நொண்டியவாரு மெதுவாக நடந்து வந்தது.

அருகில் உட்கார்ந்து தடவிக் கொடுத்தேன்.

அதிவேகமாக பறக்கும் இந்த உலகில் நம்மை போல கிழட்டு பூனையை கூட கவனிக்க ஒருவன் இருக்கிறானே என்று என்னை ஆச்சரியமாக பார்த்து, கண்களை சிமிட்டியவாரு, மியோவ் என்றது.

அதை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். பழைய பெட்ஷீட் ஒன்றை மடித்து ஒர் மூலையில் அதுக்கு மெத்தை அமைத்தேன். சாப்பிட கொஞ்சம் ஆகாரம் கொண்டு வந்து தந்தேன், ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டது. ஏறத்தாழ இரண்டு நாட்களுக்கு தூங்கியது.

எல்லா வகையான உடல் உபாதைகளுக்கும் தூக்கமே சிறந்த மருந்து என்று இயற்கையின் முக்கிய பாடத்தை கற்றுக் வைத்திருந்து.

நாட்பட நாட்பட கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறி வந்தது. வீட்டிலேயே கை வைத்தியம் செய்தேன். மொத்தமாக குணமடையவில்லை என்றாலும் ஏதோ ஒரு 60 சதவிகிதம் தேறியது.

காலையிலும் மாலையிலும் தோட்டத்தில் இளம் வெய்யிலை அனுபவித்தவாரு இளைப்பாறும். தினம் ஒரு மணி நேரமாவது எங்கோ சுற்றித்திரிய சென்றுவிட்டு வரும். இரவு நேரத்தில் என் கால்மாட்டிலேயே படுத்து நன்றாக தூங்கும். என்னமோ அது அருகில் படுத்திருந்ததால், எனக்குத் தூக்கம் அமோகமாக வந்தது.

சில மாதங்களுக்கு பின் ஒரு நாள் அது ரோட்டில் நடந்து வந்த பொழுது, படு வேகமாக சைக்கிளில் வந்த ஒரு சின்னப்பையன் பூனை மீது வண்டியை ஏற்றிவிட்டான்.

“தம்பி உன் வீட்டு பூனை அங்க அடிபட்டு கிடக்குப்பா”, என்று பால்காரி முத்தம்மா வந்து சொல்ல, பதறி அடித்துக் கொண்டு ஓடினேன்.

“தெரியாம ஏத்திட்டேன் அங்கிள்”, என்றான் ஆறாம் கிலாஸ் படிக்கும் அந்த சைக்கிள் வீரன் பூனையை பார்த்து அழுது கொண்டே...

பூனையை பார்த்த உடன், இந்த முறை வீட்டில் வைத்து வைத்தியம் செய்ய முடியாது என்ற எண்ணம் வரவே தூக்கிக் கொண்டு கால்நடை டாக்டரிடம் ஓடினேன்.

பார்த்தும் அவர்,  “I think முதுகு தண்டு முறிந்து இருக்கு, எதுக்கும் ஸ்கேன் பண்ணி பார்துடலாம்”.

டிஜிட்டல் எக்ஸ்ரே முதல் ஸ்கேன் வரை எல்லாம் செய்தோம்.

“Look here, இதோ தெரியுதா, இது Compound Fracture. அது போக இங்க பாரு, தலையில குருவிகாரன் துப்பாக்கியால சுட்டிருக்கனும். உள்ளே ஒரு பெல்லட், அதான், ரவை, ரவை, முளைக்கு ரொம்ப பக்கத்தில மாட்டிக்கிட்டிருக்கு. அத இப்போ தொட்டா பூனை உயிருக்கே ஆபத்து. முதுகு தண்டுக்கு மட்டும் இப்போ ஆபரேஷன் பண்ணனும். பண்ணினாலும் இது பழையபடி நடக்காது. பண்ணலேனா உயிர் பிழைக்காது. Usually நான் 70 வாங்குவேன், ஆனா உனக்காக ஐம்பதாயிரத்துக்கு பண்றேன்”, என்று கூறி என் பதிலுக்கு காத்திருக்காமல், நர்ஸ் மினியை பார்த்து சிரித்துக் கொண்டே பூனையை சர்ஜரிக்கு தூக்கிக் கொண்டு போனார்.

வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் மயக்கத்திலேயே இருந்தது. பிறகு கண் விழித்து கொஞ்சமாக ஆகாரம் உண்டது. ஆனால் எழுந்து நிற்க முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு உடலை தரையில் தேய்த்தவாரு நகர்ந்து தோட்டத்திற்கு போய்வரத் தொடங்கியது. அது அப்படி நகர்வதை பார்க்க நெஞ்சே பதறும்.

வாரங்கள் ஓடின, எந்த முன்னேற்றமும் இல்லை. அவ்வளவு தான் என்று நினைத்தபோது ஒரு நாள் எழ முயற்ச்சித்தது. எழும், உடனே தொப் என்று விழந்துவிடும். மீண்டும் எழும், உடனே தொப் என்று விழந்துவிடும்.

“உம், உன்னால முடியும் வா, வா, எழுந்து வா” என்று ஊக்குவித்த பொழுது என்னையே பார்த்துக் கொண்டு, மணிக்கணக்கில் முயற்சித்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக எழந்தது. ஆனாலும் நடக்க முடியவில்லை. கால்கள் தட தட தட வென்று ஆடிற்று. ஆறு மாதம் காலம் முயற்சிக்குப் பின் கால்களும் தலையும் பார்கின்சன் வந்தவரை போல ஆட, மெதுவாக நடக்க தொடங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாக பழையபடி வெளியே ஊர் சுற்றித்திரிய ஆரம்பித்தது. ஒரு நாள் நான் ஏதோ வேலையாக வெளியே சென்று திரும்பிய பொழுது தெரு முனையில் அதை சைக்கிள் ஏற்றி படு காயப்படுத்திய பையன் அருகில் நின்று கொண்டிருந்ததை பார்த்தேன்.

“அங்கிள் என் பிரண்டாயிருச்சு அங்கிள்” என்றான் குழந்தை.

என்னை பார்த்ததும் என்னிடம் ஓடி வந்தது பூனை.

விடா முயற்சியும் மன்னிக்கும் தன்மையும் எனக்கு கத்துக் கொடுத்த குரு.

வாழ்கையில் எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் போராடி பார் என்று வாழ்ந்து காட்டிய மகான்.

மடாதிபதிகளும், வேதங்களும் சொல்லாத பாடங்களை, ஒரு பூனை சொல்லும் என்று புரிந்து கொண்டேன்.

“அவனை மன்னிச்சிட்டாயா” என்றேன்.

மியோவ் என்றது கண் சிமிட்டியவாரே…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com