தொழில் நுட்பத்தின் உச்சியில் ‘ஆல்ரிஹ்லா’ பந்துகள்!

தொழில் நுட்பத்தின் உச்சியில் ‘ஆல்ரிஹ்லா’ பந்துகள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி – 2022

சார்ஜ் செய்யப்படும் பந்துகள் தெரியுமா?

மீபத்தில் நடந்தேறிய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அடிடாஸ் நிறுவனம் தயாரித்து வழங்கிய ‘அல்ரிஹ்லா’ (அரபு மொழியில் பயணம் என்று அர்த்தம்) பந்துகள் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் சார்ஜ் செய்யப்பட்டன. இந்தப் பந்தானது போட்டியின்போது நடுவர்கள் முடிவெடுப்பதற்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஏ ஐ) கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இப் பந்துகள் தொடர்பான தகவல் பெரிதாக வெளியிடப்படவில்லை. ஆனால், குரூப் சுற்றில் உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் புருனோ ஃபெர்னாண்டஸ் கோல்போஸ்ட் நோக்கி பந்தை தூக்கி உதைக்க, போஸ்ட் அருகே இருந்த ரொனால்டோ தலையால் பந்தை முட்டி கோலடித்துப் போலத் தெரிந்தது. அந்த கோலை தான் அடித்தது போலவே ரொனால்டோவும் கொண்டாடினார். ஆனால், அந்த கோல் ஃபெர்னான்டஸால் அடிக்கப்பட்டதாக மைதானத்தில் அறிவிப்பு வெளியானது. அந்த விவகாரத்தில் துல்லிய முடிவை வழங்கியது ‘அல்ரிஹ்லா’ பந்துதான்.

அந்தப் பந்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப உணரி (சென்சார்) பொருத்தப்பட்டு உள்ளது. இது பந்து கையாளப்பட்ட விதம், அதன் வேகம், திசைகள், தொடுதலுக்குள்ளானது உள்பட பல்வேறு புள்ளி விவரங்களை வழங்குகிறது. இது முடிவுகளை மேற்கொள்வதில் நடுவர்களுக்கு உதவுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஃபெர்னாண்டஸால் அடிக்கப்பட்ட பிறகு அந்தப் பந்து ரொனாடோவால் தொடப்படவில்லை என்பது அதன் மூலம் தெளிவானது.

அப்போதுதான் வெளியானது இந்தப் பந்தின் இத்தகைய சிறப்பம்சங்கள். ஆட்டத்துக்கு முன்பாக இந்தப் பந்துகள் ‘சார்ஜ்’ செய்யப்படுகின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதைக் கொண்டு விளையாடும் பட்சத்தில் ஆறுமணி நேரம் வரையில் அதில் விளையாட்டுத் தரவுகள் பதிவாகும். ஆட்டத்தின்போது ஒரு பந்து வெளியே சென்று, வேறு பந்து களத்தில் வரும் பட்சத்தில் களத்துக்கு வரும் பந்தில் இருக்கும் தொழில் நுட்பம் தானாகவே செயல்படத் தொடங்கி தரவுகளைப் பதிவு செய்துகொள்ளத் தொடங்கிவிடும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com