விஷுக்கனி காண வாருங்கள்!

விஷுக்கனி காண வாருங்கள்!

ருடாவருடம் தமிழ்ப் புத்தாண்டும் மலையாள புத்தாண்டும் அநேகமாக ஒரே நாளில் வரும்.   நாம் சித்திரை மாதம் என்று சொல்வதை மலையாளத்தில் மேஷ மாதம் என்று சொல்வார்கள்.  மேஷ மாதத்தின் முதல் நாளே விஷூ என்று அழைக்கப்படுகிறது.  சபரிமலையிலும் மேஷ மாதத்திற்கான நடை திறப்பு உண்டு.  விஷூவிற்கு இருமுடி கட்டிக் கொண்டு விரதம் இருந்து ஐயப்பனைக் காண  சபரிமலை போகிறவர்கள் வருடாவருடம் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.

விஷு பண்டிகையின் விசேஷமே, வீட்டில் விஷூக்கனி என்று பூஜையறையில் மங்கலப் பொருட்களை வரிசையாக  வைத்து காலையில் எழுந்ததும் அதில்  கண் முழிப்பதுதான்.   முதல் நாள் மாலையே பூஜையறையில் மாக்கோலமிட்டு அழகுபடுத்துவார்கள். வாசல் நிலையின் இருபுறமும் தென்னம்பாளையைக் கட்டித் தொங்கவிடும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு.  ஓணம் திருநாளுக்கு அலங்கரிப்பதைப் போல வாசலிலும் அதிகாலையில் பூக்கோலம் போடுவார்கள். முதல் நாள் இரவு விஷூக்கனி வைக்கும் கோலாகலம் ஆரம்பிக்கும்.   மேஷ மாசத்தில் பூக்கும்  மஞ்சள் நிற சரக்கொன்றைப் பூச்சரங்களை பறித்துக் கொண்டு வந்து பூஜையறையில் விஷூக்கனியில் வைப்பார்கள்.  

பூஜையறையில், முக்கியமாக ஐயப்பன், குருவாயூரப்பன், சோட்டானிக்கார பகவதி, அதைத் தவிர அவர்கள் குலதெய்வமான உள்ளூர் பகவதி படங்கள் பிரதானமாக இருக்கும்.  இந்தப் படங்கள் பின்புலமாயிருக்க, அதன் முன்னே பெரிய நிலைக் கண்ணாடியை வைப்பார்கள்.  அந்தக் கண்ணாடிக்கு ஒரு முழு நீள பூமாலை போடப்படும்.  ஒரு நீளமான தங்க செயின் அணிவிக்கப் படும். இதைத் தவிரவும் அவரவர் வசதிக்கேற்ப தங்க நெக்லஸ், அட்டிகை என்று எதை வேண்டுமானாலும் நிலைக்கண்ணாடிக்கு அணிவிக்கலாம்.  ஒரு தேங்காயை உடைத்து கண்ணாடியின் இரு பக்கங்களிலும் தேங்காய் மூடிகள் வைக்கப்படும்.  தேங்காய் மூடிக்குள், குருவாயூரப்பன் டாலர், சின்னச் சின்ன மோதிரம் போன்ற தங்க நகைகள், வெள்ளிக் காசுகள் இட்டு நிரப்பப் படும்.  தேங்காய் மூடிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் புத்தம் புது ரூபாய் நோட்டுக்கட்டுகள், நூறு ரூபாய், அம்பது ரூபாய், பத்து ரூபாய் நோட்டுக் கட்டுகள் வைக்கப்படும். ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்கள் தனியாக ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் வைக்கப்படும். அதன் எதிரே ஒரு வாழை இலையிலேயோ அல்லது ஒரு தாம்பாளத்திலேயோ அரிசியைப் பரப்பி மாக்கோலத்தின் நடுவில் தாம்பாளத்தை வைப்பார்கள். இந்தத் தாம்பாளத்திற்கு இருபுறமும் தட்டுகளில் காய் கனி வர்க்கங்கள் வைக்கப்படும்.  பிரதானமாக, பழுத்த வெள்ளரிக்காய், மாங்காய், மாம்பழம்,  சக்கைப் பழம், ஒரு டஜனுக்குக் குறையாமல்  நேந்திரன் வாழைப்பழங்கள் வைக்கப் படும்.  ஒரு சிறிய தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்கள் வைக்கப்படும். 

இப்போது நிலைக்கண்ணாடிக்கு இருபக்கங்களிலும் , மொழுக்கென்று  கண்ணாடி உயரத்திற்கு இருக்கும் பாலக்காட்டு விளக்குகளை காலையில் ஏற்றி வைத்தால் விஷூக்கனி ரெடி!

அதிகாலையில் வீட்டுத் தலைவி முதலில் எழுந்து தன் கண்களை மூடிக் கொண்டு மெதுவாக நடந்து பூஜையறைக்கு வந்து நமஸ்கரித்து அப்படியே கண்களைத் திறந்து நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும்போது கண்ணாடிக்குப் போடப்பட்டிருக்கும் பூமாலையும், தங்கச் செயினும், நெக்லஸும் அந்த அம்மாள் கழுத்திலிருப்பது போலத் தோற்றமளிக்கும்.  கண்ணாடிக்கெதிரே வைக்கப் பட்டிருக்கும் சகல விதமான ஐஸ்வர்யங்களும், மங்கல பொருட்களும் கண்ணாடியில் தெரிய,  சகல சௌபாக்யங்களுடன் தன்னைப் பார்த்துக் கொள்வார்.  இந்த வருடம் முழுவதும் இதே போல எல்லா பாக்கியங்களும் கிட்ட வேண்டும் என்று "எண்டே குருவாயூரப்பா! என்னைக் காத்து ரட்சி!" என்று அந்த கிருஷ்ணனை அன்போடு விளித்து வேண்டிக் கொள்வார்கள். 

பிறகு வீட்டுத் தலைவி,  தன் கணவர், பிள்ளைகளை கண்களைப் பொத்தி அழைத்து வந்து, விஷுக்கனி காணச் செய்வாள்.

"விஷுக்கனி காண வாருங்கள்!"  என்று  உறவினர் களையும் அழைத்து  விஷூக்கனி காண வைப்பார்கள்.

எல்லோருக்கும் புத்தாடை நிச்சயம் உண்டு.  அன்று வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு, சிறியவர்கள் நமஸ்காரம் செய்து, 'விஷூக்கனி நீட்டம்' என்று சொல்லப்படும் பணத்தை ஆசிர்வாதமாக வாங்கிக் கொள்வார்கள்.

சதயம் என்று விருந்து சாப்பாட்டைச் சொல்வார்கள்.  நிச்சியமாக, ஒரு இடிச்சுப்புழிந்த பாயசம் என்று சொல்லப்படும் தேங்காய்ப்பால் பாயசம், சக்கைப் பிரதமன் அல்லது பாலடைப் பிரதமன்,  அவியல், பப்படம், மாங்காய்கறி, கடுகு மாங்காய் ஊறுகாய்,  காராமணித் துவரன்,  கூட்டான் என்னும் அரைத்து விட்ட சாம்பார், பச்சடி, மொளகூட்டல் எல்லாம் கண்டிப்பாக உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும் பல எண்ணிக்கைகளில் சாப்பாட்டு வகைகள் கண்ணுக்கு அலங்காரமாகவும் நாக்குக்கு சுவையாகவும் இலையில் பரிமாறப்படும்.  விருந்தினர்கள் வருகை அன்று வீடுகளில் களை கட்டும்.  புது வருஷத்திற்கும் சகல சௌபாக்கியங்களுக்கும் கட்டியம் கூறும்  மங்களகரமான பண்டிகை 'விஷூ'.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com