வெண்ணெயில் உருகிப்போகும் நம் துன்பங்கள்!

வெண்ணெயில் உருகிப்போகும் நம் துன்பங்கள்!

23-12-22    அனுமன் ஜெயந்தி.

ந்து மதத்தில் வணங்கப்படும் தெய்வங்களில் வித்தியாசமானவர் குரங்கின் முகம் கொண்ட மாருதி என்றழைக்கப்படும் அனுமன் எனும் ஆஞ்சநேயர். குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் எனும் விதிக்கு சான்றாக மனிதனின் நற்குணங்களுடன் இப்படித்தான் வாழவேண்டும் எனும் நியதியை மனிதன் உருவிலிருந்த கடவுளுக்கே கற்றுத்தந்து தெய்வமானவர் அனுமன். தன் விசுவாசத்தினாலும் பக்தியாலும் தன்னலமற்ற சேவையாலும் உலக மக்கள் அனைவரின் மனங்களிலும் நிலையான இடத்தைப் பெற்று கருவறை தெய்வங்களுக்கெல்லாம் இணையாக வணங்கப்படுபவர். குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவருக்கும் பிடித்த தெய்வம் என்றால் அது அனுமன்தான்.

       மார்கழி மாதம், மூல நட்சத்திரம், தனுசு இராசி, மேஷ லக்னம், அமாவாசை திதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் அவதரித்தார். மனித உருவில் அவதரித்த விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ ராமரின் ஒப்பற்ற பக்தனாக அடிமையாக தன் பலம் அனைத்தையும் பிரியத்துக்குரிய ராமனுக்கு அர்ப்பணித்த அனுமன் பெற்ற பரிசுதான். இந்த அகிலத்தில் ராமரைக் காட்டிலும் அதிகமாக அவருக்கு கிடைத்த மரியாதை. ஒரு பக்தனுக்கு இதை விட வேறென்ன பாக்கியம் இருக்க முடியும்? அந்த ராமரின் அருளைப்பெற இவரையே முதலில் அணுக வேண்டும் என்பதே இவரின் சிறப்பு.

        கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான அனுமன் அறிவு, வீரம், துணிச்சல், புகழ், நிகரில்லா உடல்வலிமை, வாக்கு சாதுர்யம், பணிவு, விசுவாசம், ஆரோக்கியம் ஆகியவற்றின் சாட்சியாகிறார். அழியாப்புகழ் கொண்ட சிரஞ்சீவியாக நமக்கு அருள் புரியும் இவருக்கு. சுந்தரர் எனும் பெயரும் உண்டு. இவரின் சிறப்புகளை அறிந்த வால்மீகி தன் ராமாயண சுந்தரகாண்டத்தில் ராமாயணத்தின் மொத்த நிகழ்வுகளையும் அழகாக அனுமனின் செயல்களுடனும், வெற்றிகளுடனும்  இணைத்து ஸ்லோகங்களாக வழங்கியுள்ளார். ஆகவேதான், சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வோர் ஆஞ்சநேயரின் அருளைப்பெற்று வாழ்வில் தைரியமும், வெற்றியும் பெற்று மகிழ்வர் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அனுமனின் அவதார தினமான அனுமன் ஜெயந்தியன்று பெருமாள் கோவில்களிலும், ஆஞ்சநேயர் கோவில்களிலும் பக்தர்கள் முழுவிரதமிருந்து நினைத்த காரியம் கைகூடவேண்டி வடைமாலை, துளசிமாலை, வெண்ணைய்க்காப்பு , வெற்றிலைமாலை, சந்தனக்காப்பு என பலவிதங்களில் நேர்த்திக்கடன் செலுத்தி மகிழ்கின்றனர்.

          சிறுபிராயத்தில் விளையாடுவதற்காக அன்னையான அஞ்சனை  வானில் தெரிந்த சூரியனைக்காட்டி ” அதோ பார் பந்து “ எனக் கூற அதை உண்மை என நம்பி  அனுமனும் அதைப் பிடித்து விளையாட காற்றினும் வேகமாக பாய்ந்து செல்ல அந்த நேரம் இராகு பகவானும் சூரியனைப்பிடித்து கிரகணம் ஏற்படுத்த விரைந்து செல்ல, முடிவில் வாயுபுத்திரனிடம் தோற்றுப்போன இராகு அனுமனிடம் தனக்குப் பிடித்த உளுந்தினால் மாலைகட்டி எவர் உன்னை  வழிபடுகின்றனரோ அவரைப் பிடித்து  தோஷமுண்டாக்கமாட்டேன் எனும் வாக்குறுதியை அளித்தார். ஆகவேதான் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடுகிறார்கள். அறிவியல் ரீதியாகவும் உளுந்தில் இருக்கும் சத்துக்கள் உடல் பலத்தை அதிகரிக்கச்செய்யும் என்பதாலும் பலத்தில் சிறந்த அனுமனுக்கு வடைமாலை சாற்றி. பிரசாதமாக பகிர்கிறார்கள்,

       ராவணனுடன் போரிட்ட ஆஞ்சநேயருக்கு உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டு துயருற்றதை கண்ட ராமன் வெண்ணையை உடலெங்கும் பூசி அனுமனின் வேதனையை நீக்கியது போல வெண்ணையை சாற்றி வேண்டும்போது பக்தர்களின் துன்பங்களும் உருகும் என்பது ஐதீகம். சந்தனக்காப்பும் அனுமனைக் குளிரவைத்து நாம் வேண்டுவதை தரும்.

        மேலும் கடினமான காரியம் என்றாலும் அனுமனிடம் வேண்டி நம்பிக்கையுடன் வெற்றிலையை மாலையாக்கி  சூட்டுவது வெற்றி தரும்   காரணம் சிறையில் இருந்த சீதையினால் “உனக்கு வெற்றி உண்டாகட்டும்” என்று வெற்றிலைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட அனுமனைப்போல் தங்களின் வெற்றியும் உறுதியாக வெற்றிலை மாலையைக் கட்டி அனுமனுக்கு அணிந்து வேண்டு வோருக்கு வெற்றி நிச்சயம். ராமர் விரும்பிய  துளசிமாலையை அனுமனும் விரும்பி ஏற்பார்.

அனுமனின் அவதார நாளான இன்று உடல் மற்றும் மனத் தூய்மையுடன்  அவரை நம் மனங்களில் நிறுத்தி “ஓம் ஹம் ஹனுமதே நம’”  எனும் மந்திரத்தை உச்சரித்து, புஷ்பங்களுடன் துளசிமாலை போன்றவற்றை சாற்றி, அவல், கடலை, சக்கரை. தேன் போன்றவற்றை நைவேத்யமாக்கி துளசிதாசரின் ஹனுமான் சாலிஸா, இராமாயணத்தின் சுந்தரகாண்டம் ஆகியவற்றை பாராயணம் செய்து வழிபடவேண்டும். சூழல்கள் காரணமாக  இவற்றை செய்ய முடியவில்லை எனினும் மனதார ராம நாமம் சொல்லுங்கள் போதும். அனுமன் ஓடி வருவார் காப்பாற்ற.

          இன்று மட்டுமல்ல அனுதினமும் அஞ்சனை மைந்தனை அவருக்குப் பிடித்தமான  ராம நாமத்தை உச்சரித்து நம்பிக்கையுடன் வணங்கினோம் என்றால் உலகின் அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்து சகல நன்மைகளையும் அருள்வார் ஆஞ்சநேயர் என்பது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com