பெற்றோர்களே உஷார்!

பெற்றோர்களே உஷார்!

டந்த வாரம் எல்லா செய்தித்தாள்களிலும் முதல் பக்கம் இடம் பெற்றிருந்த ஒரு செய்தி... "மாணவியரின் பையில் வயதுக்கு மீறிய பொருட்கள்" படித்தவுடன் நெஞ்சம் பகீரென்றது. படிக்க படிக்க வருங்கால தலைமுறையை நினைத்து பயம் வந்தது. இதற்கெல்லாம் காரணம் யார்?யாரை கை காண்பிப்பது ? கண்டிப்பாக பெற்றவர்களின் கவனக்குறைவுதான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பெரும்பாலான பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமே பிரதான நோக்கமாக வைத்துக் கொண்டிருக் கிறார்கள். வருடத்தின் 365 நாட்களும் உழைத்துக் கொண்டே இருப்பவர்களை சிறந்த உழைப்பாளி என்று கருதுவதை விட வாழ்க்கையை அனுபவிக்க தெரியாத அப்பாவிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்போ வாழ்க்கை நடத்த பணம் வேண்டாமா ? வேண்டும்! தாங்க. கண்டிப்பா வேண்டும். அடிப்படைத் தேவை, ஆடம்பரத்தேவை என்கிற இரண்டு குதிரைகளின் மீதும் பயணம் செய்வதை முதலில் நிறுத்துங்கள். முக்கால்வாசி ஆடம்பரத் தேவைகளின் பட்டியலை உற்று நோக்கினால் அதில் பாதி உங்கள் குடும்பத்தின் உபயோகத்திற்காகவும், மீதி மற்றவர்கள் மனதில் உங்கள் குடும்பத்தைப் பற்றிய அபிப்பிராயத்தை / அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காகவும் மட்டும்தான் இருக்கும்.

அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டும் பணம் சம்பாதித்தால்... நிறைய நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

பிள்ளைகள் குழப்பத்துடன் தென்பட்டால், பெற்றோர் செய்ய வேண்டியது அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது தான். எந்த வேலை இருந்தாலும் ஓரமாக போட்டு விட்டு, அவர்களை நிதானமாக ரிலாக்ஸாக விசாரியுங்கள். அவர்களின் குழப்பத்துக்கு தீர்வு காணுங்கள். ‌‌

பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் உரையாடல்கள் மிக அவசியம். அப்பாகிட்ட சொன்னா... அம்மாகிட்ட சொன்னா... சரியான அறிவுரை கொடுப்பாங்க என பிள்ளைகள் நினைக்கும் அளவுக்கு பெற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும். சின்ன வயதில் இருந்து இந்த பிணைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டும்.

ந்த விஷயத்துக்கும் நான்தான் ஏற்கனவே பேசியாச்சே... என்று ஒரே சிட்டிங்கில் முற்றுப்புள்ளி வைக்க எண்ணாதீர்கள். சில விஷயங்களை அடிக்கடி பேச வேண்டும். கெட்ட விஷயங்களை தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறது உலகம் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே அதற்கு ஏற்ப நல்ல விஷயங்களை அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பதும் அவசியம்.

செல்போன் இன்றைய பிள்ளைகளின் கவச குண்டலம் ஆகிவிட்டது. ஆனால் அதைப் பார்த்து டென்ஷன் ஆவதற்கு பதில், அவர்கள் வீட்டில் செல்போன் பயன் படுத்தும் நேரத்தை முதலில் லிமிட் செய்யுங்கள். பின், அதை தேவைக்குதான் பயன்படுத்த வேண்டும் என்பதை மெல்ல மெல்ல புரிய வையுங்கள்.

வருமுன் காப்பது நல்லது. செல்போன் வாங்கிக் கொடுத்து, நெட் கனெக்ஷன் கொடுத்து... இப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு அதில் அவர்கள் பொழுதை வீணாக்குவதை சொல்லி புலம்பி பயனில்லை. எனவே, பிள்ளைகளுக்கு தேவையானதை மட்டும் வாங்கி கொடுங்கள். அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் அல்ல!

பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு அவ்வப்போது சென்று வாருங்கள். வகுப்பு ஆசிரியர்களை சந்தித்து உரையாடுங்கள். பிள்ளைகளின் தேவை என்ன என்பதை கவனியுங்கள். முக்கியமாக பெற்றோருக்கு அதீத பொறுமை அவசியம். இந்த டீன் பருவத்தில் கலவையான உணர்வுகள் மேலோங்கும் அதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சி என்பதை புரிந்துகொண்டு அவர்களை நிதானத்துடன் அணுக வேண்டியது அவசியம்.

பிள்ளைகளின் விருப்பங்களுக்கு தயவு செய்து நேரடியாக பதில் சொல்லுங்கள்.' இது தவறு , இது சரி, இதன் விளைவுகள் இவை' என்பதை பளிச்சென்று நெத்தியடியாக சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் கருத்தும் அதன் மீது நீங்கள் வைத்திருக்கும் உறுதியும் பிள்ளைகளுக்கு புரியவேண்டியது அதிமுக்கியம்.

பிள்ளைகள் செய்யக்கூடாத ஒரு தவறை செய்திருந்தாலும் கூட, உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என நம்பிக்கையூட்டுங்கள். அப்பா அம்மா எப்பவும் உனக்கு துணையாக இருப்போம் என்று நம்பிக்கை அவர்களுக்கு தர வேண்டுமே தவிர ,"வரட்டும் பார்க்கலாம் " என்று அவர்களின் தப்புகளை ஊக்குவிப்பதாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிள்ளைகளை சமூக விஷயங்களில் ஈடுபட ஊக்கப்படுத்துவது அவசியம். அவர்களின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து பேசுங்கள். நல்ல ஹாபிகளுக்கு உற்சாகமூட்டுங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடப்பவற்றையெல்லாம் கேட்டறியுங்கள். இதெல்லாம் தான் அவர்களின் பருவத்தை வளமாக்கும்.

பிள்ளைகளின் நண்பர்கள் மேல் ஒருவேளை உங்களுக்கு திருப்தி இல்லை என்றாலும் ,"இனிமேல் அவன் கூட சேர்ந்தேனா பார்...'என்று அதை அவர்களிடம் கோபத்துடன் வெளிப்படுத்தாதீர்கள். அந்த எதிர்ப்பு அவர்களின் நட்பை இன்னும் நெருக்கமாக்கும். மாறாக, உங்கள் பிள்ளைக்கு அந்த நண்பரை பிடிப்பதற்கான காரணங்களை இதமாகப் பேசி தெரிந்து கொண்டு, உங்களுக்கு அந்த நண்பரை பிடிக்காததற்கான காரணத்தையும் நிதானமாக உங்கள் பிள்ளையிடம் தெரிவியுங்கள். எந்த தரப்பின் காரணங்கள் ஸ்ட்ராங்கா இருக்கிறதோ, அதன்படி நீயே முடிவெடு என்று கூறி விடுங்கள்.

முக்கியமாக பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி குறித்து கண்டிப்பாக பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். பாலியல் கல்வியில் உடல் ஆரோக்கியம், தகாத உறவுகள், அதன் விளைவுகள், அதனால் பாதிக்கப்படப் போகும் எதிர்காலம், கலாச்சாரம், குடும்ப சூழல் என அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். பாலியலில் டீன் ஏஜ் பருவத்தினருக்கு எழும் கிளர்ச்சியைத் தாண்டி அதில் உள்ள விளைவுகளை புரிய வைப்பதே முக்கியம். அது மற்றவர்களை விட பெற்றவர்களால்தான் புரியவைக்க முடியும்.

'பணம், பணம்' என்று பணத்தின் பின் ஓடாதீர்கள். ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்க்கும்போது குடும்பம் என்ற அமைப்பே இருக்காது பணம் மட்டும்தான் உங்கள் கைகளில் இருக்கும் அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. பெற்றோர்களே... தயவு செய்து தும்பை விட்டு வாலைப் பிடிக்க முயற்சி செய்யாதீர்கள்.

கடைசியாக பிள்ளைகளுக்கு...

ஒன்று மற்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்பிள்ளைகளே!

நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென உலகத்தில் ஆசைப்படும் இரு ஜீவன்கள்," அம்மா, அப்பா "மட்டும்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகச் சிறந்த நண்பர்கள். நீங்கள் இந்த உலகத்திற்கு வந்ததும் அவர்களால்தான். அவர்களுக்கு நீங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறீர்கள். படிக்கும் காலத்தில் நற்பண்புகளை வளர்த்துக்கொண்டு, பெற்றோரிடம் நல்ல பிள்ளை என பெயரெடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com