பொறுப்பான பெற்றோரும், தவிக்கும் இளம் பெண்களும்!

பொறுப்பான பெற்றோரும், தவிக்கும் இளம் பெண்களும்!

விழிப்புணர்வு

தோழி அலைபேசியில் அழைத்து “கொஞ்சம் வர முடியுமா?” என்றதும் சட்டென்று கிளம்பிவிட்டேன். அவள் குரலில் இருந்தே அவள் வீட்டில் ஏதோ பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதை அறிந்தேன். துன்பத்தில் தோள் தருவதுதானே நல்ல நட்புக்கு அழகு.

வீட்டில் அவரும் அவர் கணவரும் ஒருபுறம் உம்மென்று இருக்க அவர்களின் ஒரே செல்ல மகள் கண்கலங்கியபடி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் அத்தை என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள். சின்ன வயசுல இருந்தே ஆன்ட்டி என்று அழைக்காதே என்று சொல்லி அத்தை யானவள் நான்.

’’ நீங்களே சொல்லுங்கள் நான் கேட்டதெல்லாம் வாங்கித்தந்து என்னை எவ்வளவு செல்லமா வளர்த்தாங்க என் அப்பா அம்மான்னு உங்களுக்குத் தெரியுமே. நான் விரும்பிய படிப்பை படிக்க வைத்ததற்கு அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள். இப்போது எனக்கு வேலையும் கிடைத்து விட்டது. இன்னும் இரண்டு மாசத்துல நான் வேலையில் ஜாயின் பண்ணனும்.

இப்பப்போய் திடீர்னு யாரோ நல்ல மாப்பிள்ளைனு எனக்குக் கல்யாணம் பண்ணப் பாக்கறாங்க. இது நியாயமா? எனக்காக கஷ்டப்பட்டவங்களுக்கு நான் சம்பாதித்து நிறைய செய்ய வேண்டும் என்று நெஞ்சு நிறைய ஆசைப்பட்டேன். ஆனா அதை தவிடு பொடியாக்கி என்னைக் கல்யாணம்கிற பேர்ல வேற வீட்டுக்கு அனுப்பறாங்க.

நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லல. இத்தனை நாள் எனக்காக பார்த்துப்பார்த்து செய்தவர்களுக்கு நானே சுயமா சம்பாதிச்சு செய்யணும்னு நினைக்கிறது தப்பா அத்தை? அதனாலதான் கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்கன்னுதான் சொல்றேன்’’. கண்களில் நீர் தளும்ப விசும்பினாள். தெளிவாகப் பேசிய அவளின் கருத்திலிருந்த நியாயம் புரிந்தது.

இது என் தோழி வீட்டில் மட்டும் நடக்கும் பிரச்னை இல்லை. பெரும்பாலான பெற்றோர் மகளுக்கிடையில் நடக்கும் பனிப்போர்தான் இது. பெண்ணை பொக்கிஷம் போல் வளர்த்து நன்கு படிக்க வைக்கும் பெற்றோருக்கு நல்ல வரன் அமையும்போது அவர்களின் திருமணத்தையும் நடத்தி மகிழ வேண்டும் எனும் ஆவல்.

ஆனால் பெண்ணின் மனநிலையோ வேறு. செடி நட்டு பராமரித்து பூக்கள் மலரும்போது பலனை அடுத்த வீடு அனுபவிப்பதுபோல் தான் படிக்க வைத்த பெற்றோருக்கு செய்யாமல் எங்கிருந்தோ வந்து திருமணம் செய்யும் கணவனின் வீட்டாருக்காக தன் கல்வி வருமானத்தை செலவழிப்பதா என்பதே பெண்களின் கேள்வி.

அந்தக் காலம் போல் இல்லை பெண்களின் நிலை. கல்வியைக்கற்று ஆண்களுக்கு நிகராக சம்பாதித்து ஏன் அவர்களை விடவும் அதிகமாக சம்பாதிக்கும் திறமை பெற்று யாரையும் சார்ந்திராமல் சுயமாக நிற்கும் வலிமையுடன் நினைத்ததை செய்யும் உரிமைகளும் அதிகமாகியுள்ளது. இப்படி பூரண அறிவும் சுதந்திரமும் கொண்ட பெண்களுக்கு திருமணம் எனும் பந்தத்தில் தன்னால் எப்போது இணைய முடியும் என்பதை சொல்லும் உரிமையும் உண்டு என்பதை பெரும்பாலான பெற்றோர் மறந்து விடுகின்றனர் என்பது பெண்களின் வாதம்.

ஆனால் பெற்றோரின் நிலையிலிருந்து பார்க்கும்போது தகுந்த மாப்பிள்ளைகிடைக்கும்போது திருமணத்தை முடிப்பதை தங்கள் அந்தஸ்தாகவும் கடமையாகவும் கருதுவது கலாசார சீர்கேடுகள் மிகுந்து விட்ட இக்காலத்தில் சரியென்றே தோன்றுகிறது. ஏனெனில் நம் சமூக கட்டமைப்புகள் அப்படி.

இன்றும் ஆணாதிக்கமும் பெண்ணாதிக்கமும் நிறைந்த சில வீடுகளில் நல்ல வாழ்க்கை வருகிறதென்று படிப்பை பாதியில் நிறுத்தி “திருமணத்துக்குப் பின் உன் கணவர் சொல்படி நடந்து அவர்கள் படிக்க வைத்தால் மேலே படி “என்று பெற்றோரும் “ எங்கள் வீட்டிற்கு வா. நாங்கள் நீ விரும்பியபடி படிக்க வைக்கிறோம்” என உறுதி தந்து திருமணம் முடிந்ததும் அதைக் காற்றில் பறக்கவிட்டுப் பெண்ணின் மனதை வேதனைப்படுத்தும் புகுந்த வீட்டினரும் இருக்கவே செய்கின்றனர். இப்படியெல்லாம் செய்யாமல் பெண்ணின் விருப்பத்தைப் புரிந்து அதன்படி பெற்றோர் முடிவெடுப்பதுதான் சிறந்தது. படிக்க வைத்தால் மட்டும் போதுமா? அதற்குரிய பலனை அந்தப் பெண் நிம்மதியாக அனுபவிக்க வேண்டாமா?

தன் பெற்றோருக்கு தன்னால் ஆன உதவியை அளிக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை உடனே கணவனுக்காக விட்டுத் தர வேண்டுமா? இன்றைய இளைஞர்கள் இதை புரிந்துகொண்டு வரப்போகும் மனைவியின் பெற்றோருக்கும் தேவையான உதவிகளை அவர்கள் கேட்காமலே செய்ய எண்ண வேண்டும்.

இன்னும் ஒன்று. பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணிடம் கை நீட்டி வாங்குவதை மிகவும் வருந்தக்கூடிய அல்லது கவுரவக் குறைச்சலாக நினைத்து அதைத் தவிர்க் கின்றனர். இந்த மனநிலையை மாற்றி பெண் செய்யும் உதவிகளை ஏற்றுக்கொள்ள பெற்றோரும் பழகவேண்டும். இதை மாப்பிள்ளை வீட்டாரும் மனப்பக்குவத்துடன் அணுக வேண்டும்.

ஆகவே பெண்ணின் விருப்பத்தைக் கேட்டு புரிந்துகொண்டு பெற்றோரும் பெற்றோரின் கடமையை புரிந்து கொண்டு பெண்ணும் தங்கள் நிலையை விட்டுத்தந்து நல்ல திருமண வாழ்வையும் பெற வேண்டும். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com