
திருப்பள்ளியெழுச்சி:
அதிகாலை நேரத்தில் திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது. அதன்பிறகு காலை நேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன் ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும் ஆராதனைகள் பக்தர்களன் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவை. அமுது நைவேத்தியம் செய்யப்படும்போது திருப்பாவையில் வரும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரம் பக்தர்களால் உணர்ச்சிகரமாகப் பாடப்படும்.
மார்கழி நீராட்ட உற்சவம்:
மார்கழி மாதம் 23ஆம் தேதி இரவு தொடங்குகிறது ஆண்டாள் நீராட்ட உற்சவம். இந்த உற்சவம் தை மாதப் பிறப்பு வரை கொண்டாடப்படும். மார்கழி 22ஆம் தேதி ‘பிரியா விடை” வைபவம் நடைபெறும் ஸ்ரீ வடபெருங் கோயிலுடையான் சன்னிதிக்கு எழுந்தருளும் ஆண்டாளுக்கு அங்கே மகா மண்டபத்தில் தனியாக திருமஞ்சனம் நடைபெறும். பிறகு பக்தர்கள் புடைசூழ மலர் மழை பொழிய புஷ்பக் கொண்டை அலங்காரத் துடன் மூலஸ்தானத்துக்கு ஸ்ரீஆண்டாள் எழுந்தருள்கிறாள். வடபத்ரசாயி பெருமாளுடன் சேர்ந்து காட்சி தரும் ஆண்டாளுக்கு திருவாராதனம் எனப்படும் பூஜை நடைபெறும்.
ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட உற்சவத்தின் முதல்நாள் பாட்டு வைபவம்; இரண்டாம் நாள் கள்ளழகர் திருக்கோலம், மூன்றாம் நாள் கண்ணன் கோலம், நான்காம் நாள் முத்தங்கி சேவை, ஐந்தாம் நாள் பெரிய பெருமாள் கோலம், ஆறாம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம், ஏழாம் நாள் தங்க கவச சேவை தரிசனம் சிறப்பு.

எண்ணெய் காப்பு வைபவம்:
திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத்தில் மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு வைபவம் நடைபெறும். நெற்றிச்சுட்டி, தலைநாகர் தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன் சவுரி தரித்து கோதாராணியாக அமர்ந்த நிலையில் காட்சி தருவார். பிறகு ஆபரணங்களைக் களைந்து தலையைக் கோதி சுகந்த தைலம் தடவி சவுரியை பெரிய கொண்டையாக முடித்து ஆயிரம் துளைகள் கொண்ட வெள்ளித் தாம்பாளம் கொண்டு மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளால் அபிஷேகம் செய்து முடிவில் தங்கக் குடத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
தை 1ம் தேதி கூடாரவல்லி வைபவம் அன்று அக்கார அடிசில் நைவேத்தியம் செய்து பிரசாதம் அளிப்பார்கள்.
திவ்ய பிரபந்த உற்சவத்தில் ஆண்டாள் தன் இல்லத்துக்கு செல்லும் பச்சை பரத்தல் வைபவத்தில் பச்சைக் காய்கறிகள், திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியம் செய்வர்.