வகுப்பறைகளுக்கு வெளியே... கற்றலில் ஆர்வம் வருவது எப்படி?

வகுப்பறைகளுக்கு வெளியே... கற்றலில் ஆர்வம் வருவது எப்படி?

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியை சசிகலா இளங்கேசன். அவரது கணவர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். சசிகலா இளங்கேசன் தனது முகநூல் பக்கத்தில், ‘மனித தர்மத்தைப் போதிக்க விரும்பும் ஆசிரியை’ என்று குறிப்பிட்டு இருந்த வாசகம்தான் அவரிடம் நம்மைப் பேச வைத்தது.

சசிகலா இளங்கேசன்
சசிகலா இளங்கேசன்

இந்தச் சமூகத்தின் மீது இப்படியாக உங்கள் பார்வை பதிந்தது எப்படி? 

ரு ஆசிரியைக்கு வகுப்பறைகள் மட்டுமே உலகம் இல்லை. ஆசிரியைக்கும் சரி மாணவ மாணவியர் களுக்கும் சரி வகுப்பறைகளுக்கு வெளியேயும் ஒரு உலகம் உள்ளது. ஆசிரியையும் மாணவ மாணவியரும் அங்கே கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது. அப்படித்தான் குடிசைகள் நிறைந்த ஒரு பகுதிக்கு, என்னுடைய செலவிலே ஒரு நூலகம் அமைத்துக் கொடுத்தேன். அந்த நூலகத்தில் தினசரி இரண்டு செய்தித்தாள்களைப் போட வைத்தேன். இப்போது அந்தப் பகுதி மக்கள் நூலகத்தைப் பயன்படுத்தி புத்தகங்கள் எடுத்துப் படிக்கிறார்கள். அங்குள்ள மனிதர்கள் தினசரி பத்திரிகை படிக்கும் பழக்கமே இல்லாதவர்கள். இப்போது அவர்கள் தினசரி செய்தித்தாள்கள் படித்து வருகிறார்கள்.

உங்கள் வகுப்பறையில் சமீபத்தில் நடந்த சுவையான நிகழ்வினைக் கூறுங்கள்?

ரு சிறுவனிடம் யானையை வரைந்து தா என்று சொல்லியிருந்தேன். யானை உருவத்தினை வரைந்து தந்திருந்தான். எனக்குப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. யானையின் உடல், கால்கள், வால் பகுதிக்கு கருப்பு வர்ணம் தீட்டியிருந்தான். யானையின் காதுகள், முகம், தும்பிக்கை போன்றவைகளுக்கு ரோஸ் வர்ணம் தீட்டியிருந்தான். “எந்த ஊர்லப்பா இந்த மாதிரி கலர்ல யானை இருக்கு?” என்று அவனிடம் கேட்டேன். “டீச்சர்... இது என்னோட பொம்மை யானை. அதுக்கு ரோஸ் கலர்லதான் முகம் இருக்கும். நல்லா இருக்குல்லே டீச்சர்” என்றான்.

“இதுதான் குழந்தைகளின் உலகம். குழந்தைகள் இந்த உலகத்தில் தங்களுக்குப் பிடித்தவாறு வாழ்வதால்தான் அது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கிறது. மற்றவர் களுக்குப் பிடிக்க வேண்டுமே என்று விருப்ப மில்லாத பலவற்றையும் திணித்துக்கொள்ளும் நாம் அதனால்தான் குழந்தைகள் உலகத்தில் நுழைய முடிவதில்லை.” என்பதே எனது கூற்றாகும்.

சமீபத்தில் வித்தியாசமாக என்ன செய்துள்ளீர்கள்?

குப்பில் பிள்ளைகளுக்கு நீர்க்கோளங்கள் குறித்தான பாட வகுப்பு. கரும்பலகை வாயிலாகப் பாடம் நடத்தினேன். நடத்திவிட்டு எனக்கு ஒரு சிந்தனை உதித்தது. பள்ளி நேரம் முடிந்ததும் பிள்ளைகளை அப்படியே இங்கிருக்கும் நீர்நிலைகளுக்கும் வயல்களுக்கும் வாய்க்கால்களுக்கும் அழைத்துப் போனால் என்னவென்று தோன்றியது. பாடப் புத்தகத்துடனான வகுப்பறை கற்றல் முடிந்தவுடன், வகுப்பறைக்கு வெளியே கிடைக்கும் கற்றலுக்கான பலவகை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள புறப்பட்டோம்.

அருகில் உள்ள நீர் ஆதாரங்களைத் தேடிச் சென்றோம்.

ஹேன்ட் பம்ப் எனப்படும் அடி குழாய் காட்டினோம். மண்ணிலே ஆழமாகத் துளையிட்டு தண்ணீர் உள்ள பரப்பினைத் தேர்வு செய்து, அது வரைக்கும் இரும்புக் குழாய் செறுகி, தரைக்கு மேலே அடி பம்ப் அமைத்திருக்கும் விதத்தினை விளக்கிச் சொன்னோம். கிணறு, வாய்க்கால், குளம், குட்டை, நீரூற்று, ஆறு போன்றவைகளைப் பார்வையிட்டோம். நாங்கள் கடலூர் மாவட்டவாசிகள் என்பதால் நீர் ஆதார சூழல்களை எங்கள் பிள்ளைகள் ஓரளவு அறிவார்கள்.

ஊரில் உள்ள விவசாயம், நீர்ப்பாசனம், நன்னீர், உவர் நீர், தண்ணீர் ஆவியாதல், மழை பொழிதல், வழிந்தோடுதல், நீர் மாசுபாடு தொடர்பாகக் கற்றலை விரிவாகக் கொண்டு சென்றோம்.

வகுப்பறை சூழலில் வாயே திறக்காமல் வாசித்தலையும் எழுதுதலையும் விருப்பமின்றி செய்யும் பிள்ளைகளை, நாம் கற்றலில் ஆர்வம் குறைந்தவர்களாக நினைக்கிறோம். ஆனால், வகுப்பறைகளுக்கு அப்பால் வெளிப்புறச் சூழலில்தான் தெரிகிறது அவர்கள் கற்றலில் ஆர்வம் குறைந்தவர்கள் அல்ல என்பதும் கற்கும் சூழலில்தான் ஆர்வமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதும்!

வகுப்பறை சூழலில் நாம் கணிக்கும் குழந்தையின் இயல்பானது, வெளிப்புறச் சூழலில் பொய்யாகிறது. வகுப்பறை மட்டுமல்ல காடு கழனிகளும், குளம் குட்டைகளும், வாய்க்கால் வரப்புகளுமே கற்றலுக்கான இடங்கள்தான்” என்கிறார் ஆசிரியை சசிகலா இளங்கேசன்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com