வீட்டின் தங்க நகைகளை, முக்கிய ஆவணங்களை எங்கு வைப்பது ?

வீட்டின் தங்க நகைகளை, முக்கிய ஆவணங்களை எங்கு வைப்பது ?

வீட்டின் தங்க நகைகளை, முக்கிய ஆவணங்களை, விலைமதிப்புள்ள பொருட்களை வீட்டிலேயே இரும்பு பெட்டகத்தில் வைக்கலாமா அல்லது வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கலாமா என்ற கேள்வி நமக்குள் எழும். அவற்றை நாம் இங்கே ஒப்பீடு செய்வோம்.

இரும்புப் பெட்டகம்;

எவ்வாறு வைப்பது ?

வீட்டிலுள்ள இரும்பு பெட்டகத்தில் வைப்பதென்பது எளிதான காரியம். அதற்கான பிரத்யேக இரும்பு பெட்டகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, அங்கு இருப்பாக வைத்துக் கொள்ளலாம்.

நன்மைகள்;

  • எப்போது வேண்டுமானாலும், உடனே எடுத்துக் கொள்ளலாம்.

  • வருடாந்திர கட்டணங்கள் கிடையாது.

  • அடிக்கடி எடுத்து பயன்படுத்துபவர்களுக்கு எளிதானது.

  • திருட்டின் போது, பொதுவாக இதனை திருடர்கள் திறக்க முயற்சிப்பதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு இருக்கும் குறைவான நேரத்தில், இதனை உடைத்து திறப்பது கடினமானது என்று அவர்களுக்கு தெரியும். இது நேர விரயம் என்று கருதுவர்.

தீமைகள்;

  • நல்ல இரும்பு பெட்டகங்கள் விலை அதிகம்.

  • இரும்பு பெட்டகங்கள் மட்டும் போதாது. அபாயசங்கு, கண்காணிப்பு கேமரா போன்ற இதர பாதுகாப்பு அம்சங்களை சேர்த்தால், பாதுகாப்பு கூடும்.

  • இரும்பு பெட்டகங்கள் எளிதில் எடுத்துச் செல்ல முடியாதவாறு, கட்டுமானத்துடன் இணைத்து வைக்கப்பட வேண்டும். இல்லையேல், எளிதில் எடுத்துக் கொள்ளப்பட்டால், எல்லா முக்கியப் பொருட்களையும் இழக்க நேரிடலாம்.

வங்கி பாதுகாப்பு பெட்டகம் ;

எப்படி வைப்பது ?

வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகை வைப்பதற்கு நீங்கள் வங்கியை அணுக வேண்டும். பாதுகாப்பு பெட்டகத்தின் அளவு, வங்கி அமைந்துள்ள இடம் என்பதற்கு ஏற்ப, வருடாந்திர கட்டணம் மாறுபடும். பாதுகாப்பு பெட்டகம் வழங்க, சில வங்கிகளில் , உங்களை வைப்பு நிதி வைத்துக் கொள்ளுமாறு வேண்டுவார்கள் அல்லது ஏதாவது ஒரு காப்பீடு எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுவார்கள். ஆனால், பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் படி, அவர்கள் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. வங்கியை திருப்தி படுத்த ஏதேனும் ஒரு வைப்பு நிதி குறைந்த தொகையில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.

நன்மைகள்;

  • வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. பாதுகாப்பு பெட்டக அறை, திருட்டு அபாயசங்கு, கண்காணிப்பு கேமராக்கள் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளதால், திருட்டு நடக்க வாய்ப்பு குறைவு.

  • வெளியூருக்கு செல்லும் போது, அதிக தங்கம் வீட்டிலிருந்தால் கவலைப்படுவதை போல், கவலைப்படத் தேவையில்லை.

  • தங்க நகை எப்போது தேவைப்படுகிறதோ அப்போது வங்கிக்கு சென்று பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து தங்க நகை எடுத்துக்கொள்ளலாம். உரிய அனுமதியின்றி எளிதில் எடுத்துக்கொள்ள இயலாது.

தீமைகள்;

  • வருடாந்திர பாதுகாப்பு பெட்டக கட்டணம். இது வங்கிக்கு ஏற்ப, பாதுகாப்புப் பெட்டகத்தின் அளவிற்கேற்ப மாறுபடும்.

  • வங்கி இயங்கும் நேரத்தில் தான் எடுக்க முடியும். எப்போது வேண்டுமானாலும் எளிதில் எடுக்க முடியாது.

  • பாரத ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் ஏதேனும் தொலைந்தால் அதற்கு எந்தவித நஷ்ட ஈடும் கிடையாது. இது வீட்டை வாடகைக்கு விடும் வீட்டு முதலாளியைப் போன்ற உறவுதான் ‌. பொருட்கள் தொலைந்தால் அதற்கு வாடகைதாரரே பொறுப்பு. மேலும் வங்கிக்கு என்னென்ன பொருட்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கின்றன என்ற விவரம் தெரியாது.

இவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது ?

வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை முதலில் பயன்படுத்த முயல வேண்டும். குறைந்த வருடாந்திர கட்டணத்தில் மிக அதிகமான பாதுகாப்பினை நம்மால் பெறமுடிகிறது. அத்தகைய பாதுகாப்பினை நாம் நமது வீட்டிற்குக் கொண்டு வர லட்சங்களை செலவழிக்க வேண்டும். அவ்வாறு செய்து கொண்டிருந்தாலும் அது எவ்வளவு தூரம் நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை எளிதில் சொல்ல முடியாது. வெளியூருக்குச் செல்லும்போது மனதில் தேவையற்ற மன உளைச்சலை உண்டு பண்ணும். இல்லை, எனக்கு அடிக்கடி விலைமதிப்புள்ள பொருட்களை எடுக்க வேண்டுமென்றால், எனது கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றால், வீட்டில் சிறந்த இரும்புப் பெட்டகம் வாங்கி வைக்கலாம். அதனோடு நிற்காமல், அதற்கு தேவைப்படும் திருட்டு அபாயசங்கு, கண்காணிப்பு கேமரா, கட்டிடத்தின் கான்கிரீட் கட்டுமானத்தில் அதனை இணைப்பது போன்ற இதர பாதுகாப்பு அம்சங்களையும் சேர்ப்பதன் மூலம், பாதுகாப்பினை அதிகப்படுத்த முடியும்.

”பெரும்பாலான மக்களுக்கு வங்கியின் பாதுகாப்பு பெட்டகமே போதுமானது. அது குறைந்த செலவில், அதிக பாதுகாப்பினை வழங்குகிறது.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com