
கத்தரிக்காய் எனக்குப் பிடிக்கும்;
என்னவருக்கோ புடலங்காய் தான்!
வைரமுத்துவின் வரிகள் எனக்குப் பாடம்;
அவரோ கண்ணதாசனின் தாசன்!
காபிக்கே எனது ஓட்டு;
தேநீர்தான் அவர் சாய்ஸ்!
சோகப் படம் எனக்கு ”கம்;
சண்டைப்படம் அவர் விருப்பம்!
இருபது வருட இல்லறத்துக்குப்பின்
நான் தேநீர் அருந்தியபடி
சண்டைப்படம் பார்க்க,
அவரோ காபியை ருசித்தபடி
சோகப்படத்தை ரசிக்கிறார்;
புடலங்காய் கூட்டை
ருசித்தபடி நான்; கத்தரிக்காய்
வதக்கலை சப்புக் கொட்டியபடி அவர்!
நடைப் பயிற்சியில் கண்ணதாசன் பாடலை
நான் முணுமுணுக்க, அவர் வைரமுத்துவின்
‘பனி விழும் மலர் வனத்தை, விசிலடித்தபடி!
யார் முதலில்? எப்போது எப்படி மாறினோம்?
என்று தெரியாமலேயே ஒருவருக்கொருவர்
கரைந்து கலந்து விடுவது
தான் இனிய இல்லறமா?
சற்றே சிந்தியுங்கள், இனிய மாற்றங்கள்
உங்களுக்குள்ளும் நிகழ்ந்திருக்கலாம்!
- பிரசன்னா வெங்கடேஷ்