உணவுப் பொருட்கள் மீந்து போனால் இனி கவலை வேண்டாம்!

உணவுப் பொருட்கள் மீந்து போனால் இனி கவலை வேண்டாம்!

சமைத்த உணவுப் பொருட்கள் மீந்து போனால் அவை கெடாமல் இருக்கும்பட்சத்தில் வீணாக்காமல் வேறு விதமாக பயன்படுத்தலாம்.

* இட்லி, தோசை மாவு மீந்து போனால் அதை ஹாட் பாக்கில் வைத்தால், மாவு புளிக்காமல், அதே பக்குவத்தில் இருக்கும்.

* புளிக்குழம்பு மீந்து விட்டால் வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும், குழம்பை ஊற்றி, கொதிக்க வைத்து விட்டால் புது குழம்பு போல ஆகிவிடும்.

* காலையில் செய்த சாதம், சாம்பார் மீந்து இருந்தால் வாணலில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, வற மிளகாய் தாளித்து, சாம்பாரை ஊற்றி கொதித்ததும், சாதத்தை உதிர்த்து போட்டு கிளறினால், சுவையான திடீர் பிசிபேளாபாத் தயார்.

* ரசத்தின் அடியில் மிஞ்சும் பருப்பு வண்டலில் தேவைக்கேற்ப வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி, வதக்கி, கலந்து சூடு செய்தால் தொட்டுக் கொள்ள சுவையான, கொத்சு தயார்.

* ரசத்தின் அடியில் பருப்பு மட்டும் மிஞ்சி இருந்தால், தக்காளி நறுக்கி போட்டு தேவைக்கு ஏற்ப உப்பு, ரசப்பொடி கலந்து கொதிக்க வைத்தால், புது ரசம் போல் ஆகிவிடும்.

* தேங்காய் சட்னி மீந்து விட்டால், புளித்த மோரில் கலந்து, மோர்க் குழம்பு செய்யலாம்.

* உப்புமா மீந்து விட்டால் பிரெட் துண்டுகளுக்கு இடையில் வைத்து, சாண்ட்விச் செய்யலாம். மைதா மாவில் சிறிது எண்ணெய், நீர் கலந்து பிசைந்து, அதில் மீந்த உப்புமாவை உருட்டி, பூரணம் போல் வைத்து உப்புமா போளி செய்யலாம்.

* சப்பாத்தி மீந்து போனால், மிக்ஸியில் பொடித்து, தேவைக்கேற்ற சர்க்கரை பொடி, நெய் சேர்த்து முந்திரி, ஏலக்காய் பொடி கலந்து, பிசைந்து லட்டு செய்யலாம்.

* வெல்லப்பாகு மிஞ்சினால், இஞ்சியை நறுக்கி, நெய்யில் வதக்கி, அதில் போட்டு ஊற வைத்து சாப்பிட்டால், இஞ்சி மொரப்பா போல இருக்கும்.

இது மாதிரி செய்தால், மீந்து போன எந்த உணவும் வீணாகாது. புது உணவு பொருள்களும் கிடைக்குமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com