பேட்டி: ஜிக்கன்னு.
வருகிற பிப்ரவரி 4-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிவலிங்கபுரம் என்ற மலை கிராமத்தில் இளம் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் தினேஷூக்கும் ஜெனகநந்தினிக்கும் நடக்கவுள்ள திருமண வரவேற்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.
டிஜிட்டல் டெக்னாலஜி உதவியுடன் புத்தம்புது மெட்டவர்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படிப்பட்ட திருமண வரவேற்பு நடக்கவுள்ளது.
அப்படி என்ன ஸ்பெஷல் இந்த திருமணத்தில்?!
சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரான எஸ்.பி.தினேஷ் சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து, கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்> அவருக்கும் ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே சிவலிங்கபுரம் என்ற மலை கிராமத்தில் பிறந்த ஜெனக நந்தினிக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஜெனகநந்தினியும் கம்ப்யூட்டர் என்ஜினியர்.
திருமணம் நிச்சயமான கையோடு ஜெனகநந்தினியின் தந்தை ராமசாமி இறந்துவிட, மணமகள் குட்ம்பம் துயரத்தில் ஆழ்ந்தது. அப்போதுதான் மெட்டவர்ஸ் தொழில்நுடபத்தில் புதுமையான திருமண வரவேற்பு நடத்தும் எண்ணம் தினேஷூக்கு உருவானதாம்.
‘’மெட்டாவெர்ஸ் என்பது இயற்கை அம்சங்கள், டிஜிட்டல் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்படும் மெய்நிகர் உலகம் ஆகும். இதில் நுழைபவர்கள் எல்லாரும் டிஜிட்டல் அவதாரம் எடுத்து வலம் வருவார்கள்..’’ என்று விளக்கத் தொடங்கினார் தினேஷ்.
இவர்கள் திருமணம் வருகின்ற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி சிவலிங்கபுரத்தில் நடக்கிறது. அன்று மாலையே திருமண வரவேற்பும் அதே கிராமத்தில் நடைபெறுகிறது. இதில்தான் புரட்சி! மெய்நிகர் திருமண வரவேற்பு – ஹேரி பாட்டர் படங்களில் வரும் மேஜிக் உலகமான ஹாக்வார்ட்ஸ் மாளிகையில் நடக்கவுள்ளது.
‘’மண மக்கள் நாங்கள் இருவரும் லேப்டாப்களை திறந்து, மெட்டாவெர்ஸ் மெய்நிகர் திருமண வரவேற்பில் நுழைவோம்.. இதே போல், உலகம் முழுவதும் உள்ள உறவினர்களும், நண்பர்களும் லாக்இன் செய்து, விருந்தினர்களாக வரவேற்புக்கு வருவார்கள்.
ஹேரி பாட்டர் படங்களில் வரும் மேஜிக் உலகமான ஹாக்வார்ட்ஸ் மாளிகையில் திருமண வரவேற்பு நடக்கும். இதற்கு, ஜெனக நந்தினியின் தந்தையான மறைந்த ராமசாமி தலைமை வகிப்பார் பாரம்பரிய உடை அணிந்த மணமக்களின் டிஜிட்டல் அவதாரங்களே விருந்தினர்களை வரவேற்கும். விருந்தினர்களும் டிஜிட்டல் அவதாரங்களாக வந்து, மணமக்களை ஆசிர்வதித்து, பரிசுகள் வழங்குவார்கள். இதில் டிஜிட்டல் அவதாரங்களின் உடை அலங்காரங்களை விருந்தினர்களே தேர்வு செய்யலாம்’’ என்றார் தினேஷ்.
இந்தியாவில் இதுவே முதல்முறையாக நடக்கும் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு ஆகும். இதற்கு ஸ்பெஷல் அழைப்பு விடுத்து, ஒரு வீடியோவை டுவிட்டரில் தினேஷ் வெளியிட்டுள்ளார்
இந்த ஏற்பாடு குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் மணமகள் ஜெனகநந்தினி சொன்னார்..
‘’ எங்கள் ஊரில் செல்போன் சிக்னல் கிடைப்பதே அரிதான விஷ்யம். அப்படிப்பட்ட இந்த குக்கிராமத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடத்துவது மிகப் பெரிய விஷயம், என் அப்பா கடந்தாண்டு இறந்து விட்டார். கல்யாணத்தின்போது என்னை வாழ்த்த அப்பா இல்லையே என்று வருந்தினேன். அப்போதுதான் என் வருங்கால கணவர் தினேஷ், ‘’கவலைப்படாதே.. அப்பா வருவார். வாழ்த்துவார்’’ என்று சொன்னார். மெட்டாவர்ஸ் மூலம் வரவேற்பு நிகழ்ச்சியில் முப்பரிமாண தோற்றத்தில் என் அப்பா உயிருடன் இருப்பது போலவே வந்து கலந்து கொள்வார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைவிட சிறந்த கல்யாணப் பரிசு வேறென்ன வேண்டும்?! என்று நெகிழ்ந்து சொன்னார் ஜெனக் நந்தினி.
ஊர்க்காரர்களுக்கும் இத்திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சி. வருங்கல மனைவியின் ஆசையை நிறைவேற்ற மாமனாரை கண்முன்னே நிறுத்தும் மாப்பிள்ளை தினேஷ்தான் கிராம மக்களின் இப்போதைய ஹீரோ.
‘’ செல்போன் சிக்னல் இல்லாத கிராமத்தில்,மாணவர்கள் ஆன்லைனில் படிக்க ரொம்ப சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கல்யாண வரவேற்புக்குப் பிறகு எங்கள் ஊர் பிரபலமாகி விடும் என்று நம்புகிறோம். அரசு எங்கள் கிராமத்திற்கு புதியதாக செல்போன் டவர் அமைத்தால் நன்றாக இருக்கும்’’ என்கிறார், ஊர்க்காரர் சென்னாசி. ஊரே மெச்சப் போகும் இந்த டிஜிட்டல் திருமணத்தை அட்சதை தூவி வாழ்த்த லேப்டாப்போடு நாமும் தயாராகலாமே!
மணமக்களுக்கு ஆசிகள்… எங்களுக்கெல்லாம் இன்னும் புரியவில்லை.பிப்ரவரி புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.உங்கள் அறிவியல் அறிவு கொண்டு உலகமெல்லாம் புகழ் பரவ வாழ்த்துக்கள்…வலை தளத்தை கலை தளமாக்கி அதில் உங்கள் வாழ்க்கை ஆரம்பம் மிக அழகு… வாழ்த்துக்களும் ஆசிகளும்…