
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 5,000 மக்கள் தொகை கொண்ட கிராமம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த கிராமத்திற்கு வந்து வாக்கு சேகரிக்கிறார்கள்.
அஞ்சோரா என்னும் கிராமம், துர்க் மற்றும் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் ஒரு பகுதி துர்க் மாவட்டத்தையும், மற்றொரு பகுதி ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தையும் சேர்ந்ததாகும்.
அந்த கிராமம் இரண்டு மாவட்டங்களுக்கு இடையிலான தெருக்களால் பிரிக்கப்பட்டுள்ளது. தெருவின் ஒரு பகுதி ராஜ்நந்தகாவ்ன் தொகுதியில் வருகிறது. எதிர் பகுதி துர்க் ஊரக தொகுதிக்குள் வருகிறது. மும்பை-ஹவுரா தேசிய நெடுஞ்சாலை-53 இல் துர்க் மற்றும் ராஜ்நந்த்காவ்ன் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது அந்த கிராமம். மேலும் இரண்டு பஞ்சாயத்துகளால் நிர்வகிக்கப்படுகிறது. அஞ்சோரா கிராம பஞ்சாயத்து ராஜ்நந்தகாவ்னிலும், அஞ்சோரா கேஹெச் கிராமப் பஞ்சாயத்து துர்க்கிலும் உள்ளது.
இதில் சுவாரஸ்மானது என்னவென்றால் தேர்தல் வந்தால் துர்க் ஊரகம் மற்றும் ராஜ்நந்தகாவ்ன் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுமே அஞ்சோரா கிராமத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதுதான்.
இரண்டு தொகுதி வேட்பாளர்களும் இங்கு வந்து பிரசாரம் செய்வதால் மக்கள் சில சமயங்களில் குழம்பிப் போகிறார்கள். கிராமம் முழுவதுமே இரண்டு தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் சுவரொட்டிகளையும், பேனர்களையும் இந்த கிராமத்தில் காணலாம்.
அஞ்சோரா கிராமம் இரண்டு எம்.எல்.ஏ.க்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறார் அஞ்சோரா பஞ்சாயத்து (ராஜ்ந ந்த்காவ்ன்) நிர்வாகி அஞ்சு சாஹு. தெருக்களை வைத்து இந்த கிராமம் பிரிக்கப்பட்டாலும், இங்குள்ள மக்கள் அமைதியாகவும் ஒருங்கிணைந்தும் செயல்பட்டு வருகின்றனர். திருவிழாக்களையும் ஒன்றாகவே கொண்டாடி வருகின்றனர் என்கிறார் அஞ்சு சாஹு. இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
எனது பிறந்தவீடு அஞ்சோரா பி பகுதியில் இருக்கிறது. அந்த பகுதியில் இருப்பவர்கள் துர்க் தொகுதி வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். எனது புகுந்தவீடு ராஜ்நந்தகாவ்ன் தொகுதிக்குள் வருகிறது. எனவே நாங்கள் அந்த தொகுதி வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவ. 7 மற்றும் நவ. 17 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் ராஜ்நந்தகாவ்ன் தொகுதியில் முதல் கட்டமான நவ. 7 ஆம் தேதியும், துர்க் ஊரகத் தொகுதியில் இரண்டாவது கட்டமான நவ. 17-லும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஞ்சோரா- பி பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாஹுவின் கணவர் மக்கன்லால் சாஹு கூறுகையில் ராஜ்நந்தகாவ்ன் மாவட்டம் 1973 ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. அதிலிருந்தே இந்த கிராமத்தில் இரண்டு பஞ்சாயத்துகள் செயல்பட்டு வருகின்றன என்றார்.
தொகுதி மறுவரையறைக்குப் பின் இந்த கிராமத்தின் ஒரு பகுதி ராஜ்நந்தகான் தொகுதியிலும், மற்றொரு பகுதி துர்க் ஊரக தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர். ராஜ்நந்தகாவ்ன் மற்றும் துர்க் ஊரகத் தொகுதி இரண்டுமே முக்கியமான தொகுதிகள்தான். இங்கு முன்னாள் முதல்வர் ரமன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் தமரந்த்வாஜ் சாஹு இருவரும் களத்தில் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ.க. சார்பில் ரமன் சிங்கும், காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஷ் தேவநாகனும் போட்டியிடுகின்றனர். துர்க் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் சாஹு போட்டியிடுகிறார். பா.ஜ.க. இந்த தொகுதியில் புதுமுகமாக லலித் சந்திரகர் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.