எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் ஒருவருக்கு திருமணம் நடப்பதே பெரிய விஷயமாக உள்ளது. ஆனால், கனடாவில் மணப்பெண்ணின் வித்தியாசமான கண்டிஷனுக்கு உறவினர்கள் ஒத்துவராததால், மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்திய வினோத நிகழ்வு நடந்துள்ளது.
திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் மிகவும் சந்தோஷமான நிகழ்வாகும். திருமணம் என்றாலே அலங்காரங்கள், மண்டபங்கள், உணவு என எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வார்கள். இப்படி சந்தோஷமாக அனைத்தையும் அதிக சிரத்தை எடுத்து செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென திருமணம் நின்றுவிட்டால் எப்படி இருக்கும்? அதை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதன் வலியும் அவமானமும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதது.
ஆனால் கனடாவைச் சேர்ந்த சூசன் என்ற பெண்மணி தன் திருமணத்தை தானே வேண்டாம் என நிறுத்தியுள்ளார். இதற்கு அவர் கூறிய வித்தியாசமான காரணம் அனைவரையும் ஆச்சரியத்தில் அழுத்தியுள்ளது. அதாவது இந்த பெண்மணி தன்னுடைய திருமண அழைப்பிதழில், திருமணத்திற்கு வரும் அவர்களது சொந்த பந்தங்களும், நண்பர்களும் தலா ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தனக்கு அன்பளிப்பாக தரவேண்டும் என நிர்ணயத்துள்ளார். ஆனால், இந்த நிபந்தனையை பெண்ணின் உறவினர்கள் நிராகரித்ததால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த செய்தி, தற்போது ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில், "நான்கு நாட்களுக்கு முன்னதாக தன் திருமணத்தை நிறுத்துவதாக விடுத்த அறிவிப்பு மிகுந்த மனவேதனையைத் தருவதாகவும், தன் நிபந்தனையை ஏற்றுக் கொள்ளாத உறவினர்களின் உறவை முறித்துக்கொண்டு எதிர்காலத்தில் அவர்களின் எவ்விதமான நிகழ்ச்சிகளுக்கும் செல்ல மாட்டேன்" என அவர் எழுதியுள்ளார். மேலும் அந்த பதிவில் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
இதைப் பார்த்த இணையவாசிகள் அவர்களின் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு சென்றால் ஏதாவது அன்பளிப்போ, பரிசோ அல்லது மெய்யாக 200, 300 கொடுக்கலாம். ஒரே அடியாக ஒரு லட்சம் கேட்டால் யார் திருமணத்திற்கு வருவார்கள்?. இந்த பெண்ணின் வித்தியாசமான செயல் உண்மையிலேயே நம்மை வியக்க வைக்கிறது.