நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் பேசியதாவது, “ இன்றைய நவீனகாலம் அதிநவீன தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்க கூடிய காலகட்டம். ஆனால் தற்போது கூட ஏழை எளிய மக்களிடம் தொழில் நுட்பங்கள் பெருமளவில் சென்றடையவில்லை. அதை மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
வருங்காலத்தில் மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பங்கள் அதிக பங்களிப்பை செலுத்தும். நாளைய தலைமுறையினர் மத்தியில் தொழில் நுட்பங்கள் முக்கிய பங்காற்றும். வளர்ந்து வரக்கூடிய அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவாக வழக்குகளை நடத்தி முடிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றங்களில் அறிவியல் தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவது. இதன் விளைவாக செயற்கை நுண்ணறிவு என்ற ஏ ஐ தொழில்நுட்பத்தை நீதிமன்றங்களில் பயன்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் உயர் நீதிமன்றங்களையும், உச்ச நீதிமன்றங்களையும் எளிய மக்கள் எளிதாக அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும். கொரோனா ஊரடங்கு காலத்தில் காணொளி காட்சி வழியாக நடைபெற்ற விசாரணைகள் வரவேற்பை பெற்றன, இந்த நிலையில் அதை விரிவுபடுத்துவதற்காகவும் நீதிமன்றங்களில் தொடர்ந்து பயன்படுத்துவதற்காகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்பட உள்ளது என்று பேசினார்.