
கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது பெண்கள்தான். அவர்கள்தான் வலிமை மிகுந்தவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.கர்நாடக மாநிலத்தின் கிருஹ லெட்சுமி திட்டத்தை மைசூருவில் புதன்கிழமை தொடங்கிவைத்துப் பேசுகையில் ராகுல்காந்தி எம்.பி. இதைத் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள குடும்ப பெண்மணிகளுக்கு மாதம் தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தான் கிருஹ லெட்சுமி திட்டம். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 1.1 கோடி பெண்கள் பலனடைவார்கள்.
தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பெண்கள்தான் மாநிலத்தின் பலம். அவர்கள்தான் மாநிலத்தின் ஆணிவேர் போன்றவர்கள். அவர்களின் பங்களிப்பு கண்களுக்குத் தெரியாது. ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அவர்கள்தான் என்றும் குறிப்பிட்டார்.
கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு, பதவியேற்ற 100 நாட்களில் அநேகமாக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. மாநிலத்தின் மகளிர் மேம்பாட்டை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றார் ராகுல்காந்தி.
மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி எம்.பி., முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் முக்கியமான ஒன்று கிருஹ லெட்சுமி திட்டமாகும். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.
முன்னதாக பேசிய முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சி அளித்த ஐந்து முக்கிய வாக்குறுதிகளில் சக்தி, கிருஹ ஜோதி, அன்னபாக்யா ஆகிய திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது. இப்போது நான்காவது வாக்குறுதியான கிருஹ லெட்சுமி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக மாநில அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.17,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஐந்தாவது வாக்குறுதியான யுவ நிதி, அதாவது வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டமும், பட்டயப்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் தொடங்கிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.