'மார்க் ஆண்டனி' திரைப்படம் மீதான தடை உத்தரவு நீக்கம்!
கடனை திருப்பித் தராத விஷால் மீது லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஷாலுக்கு சொந்தமாக 'விஷால் பிலிம் பேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இதன் மூலமாக அவரே பல படங்களை தயாரித்துள்ளார். எனவே தன்னுடைய படத் தயாரிப்புக்காக பிரபல பைனான்சியர் அன்புச் செழியனிடமிருந்து ரூபாய் 21.29 கோடி கடன் பெற்றுள்ளார். இதை அவரால் திருப்பி செலுத்த முடியாததால், விஷாலிடம் ஒரு ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டு லைக்கா நிறுவனம் அந்தக் கடனை செலுத்தியது. அதாவது அந்தக் கடன் தொகையை விஷால் முழுவதுமாக திருப்பி செலுத்தும்வரை, விஷால் பிலிம் ஃபேக்டரியின் கீழ் வெளியாகும் எல்லா திரைப்படங்களின் உரிமையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்குவதாக அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தான் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை வெளியிட்டார். அப்போது இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை தராமல் படத்தை ரிலீஸ் செய்ததாக லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 15 கோடியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களுக்குள் விஷால் டெபாசிட் செய்யவேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விஷால் மேல் முறையீடு செய்ததால், அதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இதற்கு முன்பு வழங்கிய உத்தரவை ரத்து செய்தனர். மேலும் இனி விஷால் நிறுவனத்தின்கீழ் வெளிவரும் திரைப்படங்களை திரையரங்குகள் அல்லது OTT தளங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 8ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம். மேலும் செப்டம்பர் 12ம் தேதி விஷால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.
அதன்படி, பணத்தை எப்படி திரும்ப செலுத்தப் போகிறீர்கள்?
ஒருவேளை நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் உங்கள் திரைப்படம் அனைத்திற்கும் தடை விதிக்கலாமா?
தொடர்ந்து நீங்கள் திரைப்படங்களில் நடிப்பீர்கள், சம்பளமும் பெறுவீர்கள், ஆனால் கடனை திரும்ப செலுத்த மாட்டீர்களா?
நீங்கள் படிக்காத நபரா?
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அதைப் படிக்கவில்லையா?
நீங்கள் கையெழுத்து போடும்போது யாராவது மிரட்டினார்களா? என விஷாலிடம் நீதிபதி கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை விஷாலின் வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த பிரச்சனையில் விஷாலுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் மட்டுமே சம்பந்தம் இருப்பதால், மார்க் ஆண்டனி திரைப்படம் மீதான தடை உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது.