சென்னை துரைப்பாக்கம் ஐ.டி நிறுவனத்தில் தீ விபத்து!
சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள ஐடி நிறுவனத்தின் ஒன்பதாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினார்கள்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளது துரைப்பாக்கம் பகுதி. இங்குள்ள ராஜீவ் காந்தி சாலை மேட்டுக்குப்பம் பகுதியில் அடுக்குமாடி வணிக வளாக செயல்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தில் தனியார் ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவருகிறது. கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் ஐடி நிறுவனத்துக்கான கேண்டீன் செயல்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில், இன்று எதிர்பாராத விதமாக கேண்டீனில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால் ஒன்பதாவது தளத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதனால், கேண்டீனில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களும், வணிக வளாகத்தில் மற்ற தளங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்களும் அலறி அடித்துக்கொண்டு கட்டடத்தில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
இதனையடுத்து உடனடியான மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த தீயணைப்பு ஊழியர்கள் கரும்புகையால் சூழப்பட்டு இருந்த வணிக வளாகத்திற்கு நுழைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். வணிக வளாக அடுக்குமாடியின் ஒன்பதாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டது. அதேநேரம் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது நிம்மதி தரும் விஷயமாக உள்ளது.