விமானத்தில் செல்லும்போது நடுவானில் மூச்சு நின்றுவிட்ட இரண்டு வயது பெண் குழந்தை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் முயற்சியால் அதிசயசமாக உயிர்பிழைத்தது.
ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தில்லிக்கு புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது 2 வயது பெண் குழந்தை மூச்சுவிடமுடியாமல் சிரமப்பட்டது. கிட்டத்தட்ட அதன் மூச்சே நின்றுவிட்டது.
நல்லவேளையாக அந்த விமானத்தில் தில்லி, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) பணிபுரியும் ஐந்து மருத்துவர்களும் அதே விமானத்தில் பயணம் செய்தனர்.
2 வயது குழந்தை மூச்சுவிட சிரமப்படுவது குறித்து விமானக் குழுவினர் அறிவிப்பை வெளியிட்டனர். இதயநோய்க்காக சிகிச்சைபெற்ற குழந்தைக்கு சைனஸ் பிரச்னை இருப்பதாகவும். அதனால் மூச்சுவிட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்த எய்மஸ் மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு உடனடியாக சிகிச்சையை தொடங்கினர்.
குழந்தையை பரிசோதித்தபோது நாடித்துடிப்பு நின்றுபோயிருந்தது. உடல் குளிர்ச்சியாக இருந்தது. கை, கால்கள் விரைத்துப் போயிருந்தன. உடனே மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் விமானம் நாக்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு குழந்தைக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது குழந்தையில் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் நடுவானில் மூச்சு நின்றுவிட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 2 வயது குழந்தைக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவமனை படத்துடன் செய்தியாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.