நாமக்கல் சித்தம்பூண்டி மண்
நாமக்கல் சித்தம்பூண்டி மண்

சந்திரயான் விண்கலன்களில் பரிசோதனைக்கு உதவிய நாமக்கல் மண்..!

ந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே உற்று நோக்கும் தருணமாக அமைந்துள்ளது சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் நிகழ்வை.

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான சந்திரயான் விண்கலன் இன்று மாலை 6: 04 மணிக்கு நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு இந்த நொடி திக்..திக்.. நிமிடங்கள்தான். தேசமே கூர்ந்து நோக்கி மகிழும் இந்த வெற்றிகளின் பின்னணியில் தனது பங்கையும் அளித்து தமிழகத்தை பெருமை கொள்ள வைத்திருக்கிறது நாமக்கல் மண்.

ஆம் நிலவில் உள்ள மண்ணை போல் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் அருகே சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை உள்ள மண் நிலவில் உள்ள மண் போல்  ஒத்திருப்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் சந்திராயனின் இயக்க வெற்றிக்கு இந்த மண்ணைப் பயன்படுத்தியுள்ளனர்.

வல்லரசுகளுக்கு இணையாக நம் இந்தியாவும் விண்வெளியில் விண்கலத்தை அனுப்பி நிலவை ஆராய்ச்சி செய்யும் பணியில் இறங்கி 2008 அக்டோபர் 22ல் சந்திரயான் விண்கலத்தை உருவாக்கி ஏவியது .நிலவின் வடதுருவத்தில் ஆய்வுகள் நடத்தி நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது . அதன் தொடர்ச்சியாக நிலவின் பரப்பை ஆராய ரூபாய் 1000 கோடியில் சந்திரயான் 2 விண்கலம் உருவாக்கப்பட்டு ஜி எஸ் எல் வி எம் கே -3 ராக்கெட் மூலம் விண்ணில் 2019 ல் ஏவப்பட்டது .ஆனால் சில தொழில்நுட்ப பாதிப்புகளின் காரணமாக இதில் இருந்த முக்கிய பகுதியான “விக்ரம் லேண்டரின்”தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது .

இந்த விண்கல பணிகளுக்காக முன்னரே லேண்டர் ரோவர் சரியான முறையில் தரையிறங்குகிறதா என்ற ஆய்வுக்காக நிலவில் உள்ளது போன்ற தாது உப்புகள் ஆக்சைடுகள் போன்ற ரசாயன குணங்கள் கொண்ட மண் தேவைப்பட அமெரிக்காவில் உள்ள நாசாவிடம் இருந்து அந்த மண்ணை வாங்கி பயன்படுத்தினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

மண்ணை விலை தந்து வாங்கும் சூழல் உருவாகியதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியாவிலேயே இந்த வகை மண் உள்ளதா எனும் தேடலில் இறங்கினர்.சேலம் பெரியார் பல்கலைகழகத்தை  சேர்ந்த பேராசிரியர்கள் நிலவின் மண் மாதிரி குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதை அறிந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்களை தொடர்பு கொண்டனர். இஸ்ரோ குழுவினரின் வேண்டுகோளின்படி பெரியார் பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்குழுவினர் இஸ்ரோ ஆராய்ச்சி மையக் குழுவினருடன் இணைந்து சுமார் 50டன் அளவு நிலவின் மண்மாதிரியை சந்த்ராயன் 2 ஆராய்ச்சிக்காக தயாரித்து தந்துள்ளனர் .

 “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தாணே ,தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவின் குன்னமலை சித்தம்பூண்டி கந்தம்பாளையம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் நிலவில் இருப்பதை போன்ற அனார்த்சைட் வகை பாறைகள் உள்ளது. எனவே நாமக்கல்லில் இருந்து இந்தப் பாறைகளை வெட்டி அவற்றைப் பவுடர் போல 25 மைக்ரான் அளவு பொடியாக அரைத்து இஸ்ரோவிற்கு வழங்கி பாராட்டுகளை பெற்றுள்ளனர் சேலம் பெரியார் பல்கலைக்கழக குழு. இந்தத் தகவல்கள் அப்போதே பேசப்பட்டன .

    தொடர்ந்து பெங்களுருவில் உள்ள இஸ்ரோ மையத்தால் சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு நாமக்கலில் எடுக்கப்பட்ட மண் பரப்பின் மீது  சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் இறங்குவதையும் லேண்டர் ரோவர் ஆகியவற்றின் வெற்றிகரமான செயல்பாடுகளையும் பூமியிலேயே மாதிரி ஆராய்ச்சியில் இயக்கி கண்டறிந்தனர். அத்துடன், ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3ல் உள்ள லேண்டர் ரோவர் பத்திரமாக தரையிறங்குகிறதா என ஆராயவும் நாமக்கல் மண் பயன்பட்டதாக தகவல்கள் வெளியாகின .

சந்திரயான் -3 மற்றும் முன்னர் ஏவப்பட்ட சந்திரயான் 2 ஆகியவற்றில் நாமக்கல் மண் மூலம் பலகட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக இஸ்ரோ வெளியிட்ட தகவலால் மகிழும் நாமக்கல் மக்களுடன் நாமும் மகிழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com