
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்ஜின்கள் இன்றி பெட்டிகள் மட்டுமே தானாக ஓடிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பர்ஹர்வா என்ற பகுதியில் எஞ்சின்கள் அகற்றப்பட்ட நிலையில் காலி ரயில் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. ரயிலில் உள்ள சரக்குகளை இறக்குவதற்காக இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில். அப்போது திடீரென ரயில் தானாகவே நகரத் தொடங்கியது. தொடர்ந்து சில மீட்டர் தொலைவிற்கு ரயில் பயணித்தது. இதைப் பார்த்து அங்கிருந்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
மேலும் பலர் எஞ்சின் இன்றி தானாக ஓடிய ரயிலை ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமின்றி அதிலுள்ள ஆபத்தை உணராமல் தங்களின் செல்போனில் ரயிலின் அருகே ஓடிச்சென்று வீடியோ எடுத்தனர். அதன் அருகே சில இளைஞர்கள் செல்பி புகைப்படமும் எடுத்தனர். எனவே இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு நபர் இதன் காணொளியை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் கேப்ஷனாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், "இன்ஜின்கள் இன்றி ரயில் ஓடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? ஜார்க்கண்டின் சஹிபஞ்ச் பகுதியில் இன்ஜினே இல்லாமல் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இதனால் விபத்து எதுவும் நடக்கவில்லை. மெயின் டிராக்கில் ரயில் பெட்டிகள் தானாகவே சென்றுள்ளது. நல்லவேளை இது வேறு எந்த ரயிலுடனும் மோதவில்லை" என பதிவிட்டுள்ளார்.
ரயில் பெட்டிகள் தானாக ஓடும் வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில் இது தொடர்பாக நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கோபத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர். ரயிலை பொறுப்பற்ற முறையில் ஏன் நிறுத்தி வைத்தார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல இது ஆபத்தை உணராமல் ரயிலின் அருகே ஓடிச் சென்று செல்போனில் வீடியோ எடுப்பவர்களும் பொறுப்பின்றி நடந்து கொண்டதாக அவர்களை கடுமையாக சாடியுள்ளனர்.
ரயில் தானாக ஓடிய சமயத்தில் யாராவது அலட்சியமாக தண்டவாளத்தை கிராஸ் செய்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? அல்லது அந்த வழியே வேறு ஏதாவது ரயில்கள் வந்திருந்தால் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் எனக் கூறுகின்றனர். இதுவரை ரயில் பெட்டிகள் தானாக ஓடிய சம்பவம் குறித்து ரயில்வே துறை சார்பில் எவ்விதக் கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை.