திருப்பதி ஏழுமலையானை அசரவைத்த லலிதா ஜூவல்லரி ஓனர்!
திருப்பதி ஏழுமலையானுக்கு லலிதா ஜுவல்லரி நிறுவனம் சார்பில் 108 தங்க மலர்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையானை உலக பணக்கார கடவுள் என்றே சொல்வார்கள். அப்படி அவரது காலடியில் பணம் கொட்டி கொண்டே தான் இருக்கும். அவரை தரிசிப்பவர்களின் வீடுகளிலும் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் கூட்டம் இல்லாத நாளே இல்லை. மாதம் தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இவர்கள் காணிக்கையாக மட்டுமே ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலுத்துகின்றனர்.
பலர் இலவச தரிசனம் மேற்கொண்டாலும், ஏராளமானோர் சிறப்பு தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர். ஏனென்றால் இலவச தரிசனத்தில் பெருமாளை தரிசிக்க ஒரு நாள் ஆகிறது. இதனால் நேரத்தை விரயம் செய்யாமல் பலரும் சிறப்பு தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தாமல் போவதே இல்லை. அந்த வகையில் லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண் ரெட்டி இன்று விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அப்போது சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 108 தங்க புஷ்பங்களை காணிக்கையாக வழங்கினார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமையன்று, மூலவர் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அஷ்டத்தலபாத பத்மாராதனை சேவையில் தங்க புஷ்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கிரண் ரெட்டி சுமார் 100 சவரன் தங்கத்தை மலர்களால் ஏழுமலையானுக்கு அர்ப்பணம் செய்தார்.