2022-ல் உள்துறை, ரயில்வேத்துறை ஊழியர்கள் மீது அதிக ஊழல் புகார்கள்!

PARLIMENT
PARLIMENT

கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வேத்துறை ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் மீதுதான் அதிகம் ஊழல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது மொத்தம் 1,15,203 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 85,437 புகார்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன. 29,766 புகார்கள் நிலுவையில் உள்ளன. மேலும் இதில் 22,034 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

புகார்கள் மீது மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள் மீது 46,643 புகார்கள் வந்துள்ளன. ரயில்வேத்துறை ஊழியர்கள் மீது 10,580 புகார்களும், வங்கி ஊழியர்கள் மீது 8,129 புகார்களும் வந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மத்திய உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீதான புகார்களில் 23, 919 புகார்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன. 22,724 புகார்கள் நிலுவையில் உள்ளன. 19,198 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் மீதான புகார்களில் 9,663 புகார்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன. 917 புகார்கள் மட்டும் நிலுவையில் உள்ளன. 9 புகார்கள் மட்டும் மூன்று மாதங்களுக்கு மேலாக விசாரிக்கப்படாமல் உள்ளன. வங்கி ஊழியர்கள் மீதான 7,762 ஊழல் புகார்களில் 367 நிலுவையில் உள்ளன. 78 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக முடிவுபெறாமல் உள்ளன.

தலைநகர் தில்லியில் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எதிராக 7,370 ஊழல்புகார்கள் வந்துள்ளன. ஆனால், இவற்றில் 6,804 புகார்கள் பைசல் செய்யப்பட்டுவிட்டன. 566 புகார்கள் மட்டும் நிலுவையில் உள்ளன. 18 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக விசாரிக்கப்படாமல் உள்ளன.

மத்திய நேரடி வரிகள் வாரிய ஊழியர்கள் மீது 2,150 புகார்களும், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் மீது 1619 புகார்களும், நிதித்துறை ஊழியர்களுக்கு எதிராக 1,101 புகார்களும் வந்திருந்ததாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com