வணிக வாகனங்களை கண்காணிக்க ஒடிசா அரசு அதிரடி முடிவு!
பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் அனைத்து வகை வணிக வாகனங்களையும் கண்காணிக்க ஒடிசா அரசு முடிவு செய்து இருக்கிறது.
தற்போது நடைபெறும் குற்றங்களில் பெரும்பான்மையான குற்றங்களில் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று குற்றப்பதிவுகளின் மூலம் தெரிய வருகிறது. இந்த நிலையில் தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு பல்வேறு சட்டங்களையும், திட்டங்களையும் வகுத்து வருகிறது.
இந்த நிலையில் ஒடிசா மாநில அரசு வாகனங்களில் செல்லக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் அனைத்து தரப்பினுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வணிக வாகனங்களுக்கு கட்டாய பாதுகாப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
மூன்று சக்கர வாகனங்கள் இல்லாத அனைத்து வகை வணிக வாகனங்களுக்கும் இருப்பிடத்தை கண்காணிக்கும் கண்காணிப்பு கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி அபாய காலங்களில் ஒலி எழுப்பக்கூடிய தொழில்நுட்பமும் கொண்டவையாகும். இதன் மூலம் வாகனங்கள் அனைத்தும் அரசால் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த கருவி பஸ், டாக்ஸி, ஆம்புலன்ஸ் மற்றும் சரக்கு வாகனங்கள், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் வாகனங்கள் என்று அனைத்து வகையான வணிக வாகனங்களுக்கும் பொருத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்த வாகனங்கள் நடப்பாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்த கருவியை தங்கள் வாகனங்களில் பொருத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வாகனப் பதிவை புதுப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சம்பந்தப்பட்ட வாகனத்தினுடைய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த கருவி பொருத்தியே விற்பனை செய்யப்படும் என்றும் அந்த உத்தரவின் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒடிசா அரசினுடைய இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பட்ட மக்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.