பிரதமரின் கல்வித் தகுதி விவகாரம்: கெஜ்ரிவால், சஞ்சய் சிங் கோரிக்கைகள் நிராகரிப்பு!
கிரிமினல் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கோரி தங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவை (சம்மன்) ரத்துச் செய்யக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் இருவரும் தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் கிண்டலாகவும் இழிவாகவும் அறிக்கைகளை வெளியிட்ட்தாக குஜராத் பல்கலைக்கழகத்தால் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
ஒரு பட்டம் இருந்தால், அது உண்மையானது என்றால் அது ஏன் அவருக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் பட்டம் கொடுக்கவில்லை. அது போலியாக இருக்கலாம். பிரதமர் தில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களில் படித்திருந்தால் தங்களது மாணவர்களை நாட்டின் பிரதமர் என்று கொண்டாடி இருக்க வேண்டாமா? போலி பட்டத்தை உண்மையானது என நிரூபிக்க குஜராத் பல்கலைக்கழகம் முயற்சிக்கிறது என்று கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் பத்திரிகையாளர் சந்திப்பிலும் எக்ஸ் தளத்திலும் கருத்துக்கள் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை அவர்களின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் என்று கூறியது.இது தொடர்பான விசாரணை செப். 23 இல் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து கெஜ்ரிவால் வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.முன்னதாக செப். 6 மற்றும் 8 இல் நடந்த விசாரணையின் போது ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய குஜராத் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று வாதாடினர்.இந்த நிலையில் நீதிபதி பிரம்மபட், வழக்கு தொடர்பான உத்தரவு செப். 14 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.