ராகுல்காந்தி அடுத்த மாதம் ஐரோப்பா பயணம்!

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அடுத்த மாதம் ஐரோப்பா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது பெல்ஜியத்தில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து பேசுகிறார். பாரீஸ் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுகிறார். செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆஸ்லோவில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றுகிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் தில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு நடைபெறும் சமயத்தில் ராகுல் வெளிநாடு பயணம் செல்வது குறிப்பிடத்தக்கது. ஜி-20 நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது இந்தியா வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் முதல் வாரத்தில் ராகுல்காந்தி பாரீசுக்கு ஐந்துநாள் பயணமாகச் செல்கிறார். செப்டம்பர் 7 ஆம் தேதி பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, செப்டம்பர் 8 ஆம் தேதி பாரீஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். செப். 9 ஆம் தேதி பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.

அதன் பிறகு அங்கிருந்து நார்வே செல்லும் ராகுல்காந்தி, செப். 10ம் தேதி இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பேசுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் ராகுல்காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுவந்தார். சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி. மற்றும் நியூயார்க் நகரங்களுக்குச் சென்ற ராகுல், அங்குள்ள இந்திய வம்சாவளியினர், முதலீட்டாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை சந்தித்து உரையாடினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ராகுல் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே அவர் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்தியாவில் ஜனநாயகமே இல்லை. இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். நான் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால், எனக்கே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதியில்லை. பத்திரிகை சுதந்திரம் இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனிடையே பா.ஜ.க.வினர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com