நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீடு சம்பந்தமாக முக்கிய முடிவு?
செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ஓபிசி இட ஒதுக்கீடு சம்பந்தமான முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிறப்பின் அடிப்படையில் மக்களினுடைய வாழ்கை முறை ஏற்றத் தாழ்வுகளை சந்திப்பதை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடை அமல்படுத்தியது. இதன் மூலம் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓபிசி இட ஒதுக்கீட்டை மறு வரையறை செய்யும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகினி தலைமையிலான ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது.
முன்னாள் நீதிபதி ரோகினி தலைமையிலான ஆணையம் ஓ பி சி இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆய்வு செய்தும், பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தியும் ஓ பி சி இட ஒதுக்கீட்டுக்கான புதிய வரையறையை வகுத்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க தகுதியான 2,633 சாதிகள் கணக்கிடப்பட்டுள்ளன. மேலும் ஓ பி சி பிரிவிற்குள் வரும் அனைத்து சமூகமும் பயனடையும் வகையில் இச்சட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாக ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி குடியரசுத் தலைவரிடம் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கான மறு வரையறையை முன்னாள் நீதிபதி ரோகினி ஆணையம் சமர்ப்பித்தது. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 1000 பக்கங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக ரோகினி ஆணையம் அளித்துள்ள அறிக்கை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று நாடாளுமன்ற வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதே நேரம் பல்வேறு மாநிலங்களில் உள்ள சாதி அமைப்புகள் தாங்கள் சார்ந்து இருக்கும் சாதி ஓ பி சி இட ஒதுக்கீடு தொடர்பான மறுவரையறையிலிருந்து விடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.