தாயை தவிக்கவிட்ட மகனுக்கு 3 மாதம் சிறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி!

Dr K. Senthil Raj tuticorin collector
Dr K. Senthil Raj tuticorin collector

தூத்துக்குடியில் தாயை பராமரிக்காமல் தவறிய மூத்த மகனுக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பெற்ற தாய் தந்தையை பராமரிக்க விட்டு செல்லும் நிலை இன்று அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாகவே முதியோர் இல்லங்கள் புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லன் கிராமத்தைச் சேர்ந்த இசக்கு, மலையம்மாள் தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இசக்கு வயது மூப்பின் காரணமாக உயிரிழந்து விட்டார். அதன் பிறகு மலையம்மாளை கவனிக்க அவரது மகன்கள் முன் வரவில்லை. மலையம்மாள் ஆதரவின்றி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வருடம் மலையம்மாள் தனது மூத்த மகன் மீது தன்னை பராமரிக்க மறுப்பதாக புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முத்துக்குமார் மாதம் 5000 ரூபாயை அவரது தாய் மலையம்மாள் செலவுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. உத்தரவு அளிக்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே முத்துக்குமார் மலையம்மாளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கியதாக கூறப்படுகிறது. பிறகு வழங்காமல் இருந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மலையம்மாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனது மகன் மாத பராமரிப்பு செலவிற்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கவில்லை என்று முறையிட்டார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மலையம்மாளின் மூத்த மகன் முத்துக்குமாருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

வயது முதிர்வடைந்த பெற்றோர்களை பராமரிக்க தவறிய வாரிசுகளுக்கு இதுபோன்ற தண்டனை பாராட்டுக்குரியது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com