
தமிழ்நாட்டின் முன்னுதாரண அரசு திட்டங்களில் ஒன்றான காலை உணவு திட்டத்தை தெலுங்கானா மாநில அரசின் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை சலுகைகளை செயல்படுத்தி வருகின்றனர். அதிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரக்கூடிய மதிய உணவுத் திட்டம் முன் உதாரண அரசு திட்டம் என்று உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.
அதனுடைய தொடர் முன்னேற்றத்தின் வெளிப்பாடாக தற்போது தமிழ்நாடு காலை உணவு திட்டத்தை பயன்படுத்தி இருக்கிறது. இந்த உணவுத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மாணவருடைய கல்வியை உறுதிப்படுத்த காலை மற்றும் மதிய உணவு திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டத்தினுடைய செயல்பாட்டை பார்த்த தெலுங்கானா மாநிலம் தங்கள் மாநிலத்திலும் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வரினுடைய தனி பிரிவு செயலாளர், கல்வித்துறை செயலாளர், பெண்கள் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் நல சிறப்பு துறைச் செயலாளர், பழங்குடியினர் நல்வாழ்வுத்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலாளர் ஆகிய ஐந்து தெலுங்கானா அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு நேரில் சென்று காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.
உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது, உணவை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் கொண்டு செல்ல பின்பற்றப்படும் போக்குவரத்து முறை, பிறகு மாணவர்களுடைய கருத்து கேட்பு, ஆசிரியர்களுடைய கருத்து கேட்பு, பெற்றோர்களுடைய கருத்து கேட்பு என்று திட்டத்தினுடைய முழு தகவல்களையும் சேகரித்து இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தெலுங்கானாவிலும் அந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.