
எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் சிவசேனை கட்சியின் இருபிரிவினரும் தாக்கல் செய்த முனு மீது வருகிற டிம்பர் 31 ஆம் தேதிக்குள்ளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாக்கல் செய்த மனு மீது ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான நேரம் நெருங்கி வரும் நிலையில் இந்த வழக்கை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
56 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் பற்றி முடிவு செய்ய அடுத்த ஆண்டு பிப். 29-வரை கால அவகாசம் அளிக்குமாறு சட்டப்பேரவைச் செயலகம் கால அவகாசம் கேட்டதை அடுத்து இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஜனவரி 31 வரை கால அவகாசம் கேட்டிருந்தார்.
இந்த மனுக்கள் கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனியாக பிரிந்து சென்று பா.ஜ.க.வுடன் சேர்ந்து உத்தரவ் தாக்கரே அரசை கவிழ்த்து அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதிலிருந்து நிலுவையில் உள்ளது.
திங்கள்கிழமை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் (கட்சித் தாவலை தடுக்கும்) கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது கவலை அளிக்கிறது. அதன் புனிதம் காக்கப்பட வேண்டும். இல்லையெனில் அதை காற்றில் பறக்கவிட்டதுபோலாகிவிடும் என்று தெரிவித்தது.
நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி மனுக்களை தாமதப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நீதிமன்றம், மனுக்கள் மீது நர்வேகர் முடிவெடுக்க யதார்த்தமான காலக்கெடுவுடன் இறுதிவாய்ப்பை வழங்கியது. விரைவில் முடிவெடுக்குமாறும் எச்சரிக்கை விடுத்திருந்தது. செப்டம்பர் 18-க்கு பிறகு ஒரு காலக்கெடுவை தெரிவிக்குமாறு நீதிமன்றம் கூறியது. அதன்படி நர்வேகர் காலக்கெடுவை சமர்த்தபோதிலும் உச்சநீதிமன்றம் அதில் திருப்தி அடையவில்லை.
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தனியார் டி.வி.க்கு பேட்டியளித்திருந்த பேரவைத் தலைவர் நர்வேகர், சட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஆனால், தகுதிநீக்கம் குறித்து முடிவெடுக்க எவ்வளவு நாளாகும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்று தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு மனுக்களை விசாரிக்க நர்வேகருக்கு நீதிமன்றம் ஒருவாரம் காலஅவகாசம் வழங்கியது. மேலும் தாமதம் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.