சச்சின், 'ஸ்பெஷல் 50' கொண்டாடியது எப்படின்னு தெரியுமா?
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கடந்த ஏப்ரல் 24ம் தேதி, தனது 50வது வயதை எட்டியதை உலகமே கொண்டாடியது.
கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி அவரை மகிழ்வித்தது ஒருபக்கமென்றால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் ஒரு படி மேலே சென்று அவரை கௌரவப்படுத்தியது.
சச்சினின் 50வது பிறந்தநாள் அன்று, ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய மைதானமாக கருதப்படும் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், வீரர்கள் வருவதற்கு நிறைய கதவுகள் இருக்கும் நிலையில், அதில் ஒரு கதவுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா என இருவரின் பெயர்களும் சூட்டி அவரை பெருமைப்படுத்தியது.
டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக, உலக ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்படும் ஒரு வீரர் என்றால் அது சச்சின் டெண்டுலகர்தான். அந்தளவுக்கு முறியடிக்க முடியாத பல சாதனைகளை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், அவரது பிறந்தநாளை பலரும் பலவிதமாக கொண்டாடினாலும், சச்சின் கொண்டாடிய விதம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
சச்சின் பொதுவாகவே ட்விட்டரில் பரபரப்பாக இருக்கக்கூடியவர். கிரிக்கெட் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களையும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்ந்துவருகிறார்.
அந்தவகையில் தான் 50 வயது எட்டியதையடுத்து, அதை கொண்டாடியதை, அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதை குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தனது மனைவி, மகளுடன் இருக்கும் சச்சின், கிராமத்தில் பெண்கள் சமைப்பதற்கு அடுப்பூதுவதைப் போல், சச்சினும் அமர்ந்து அடுப்பூதுவதாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
புகைப்படத்தைப் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு நாளும் நீங்கள் அரை சதம் அடிப்பதில்லை. ஆனால் அதை செய்யும்போது, முக்கியமானவர்களுடன் சேர்ந்து அதைக் கொண்டாடுவதில்தான் மிகப்பெரிய மகிழ்ச்சி. சமீபத்தில் எனது 'ஸ்பெஷல் 50' அமைதியான அழகான கிராமத்தில், மனைவி, மகளுடன் கொண்டாடினேன் என்றும், இந்த நிகழ்வில் அர்ஜூனை மிஸ் செய்ததாகவும், அவர் தற்போது ஐபிஎல்-லில் பிஸியாக இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.