74-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்! தில்லியில் தேசியக் கொடியேற்றினார் முர்மு!

74-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்! தில்லியில் தேசியக் கொடியேற்றினார் முர்மு!

74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் படாக் அல்சிசி- சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஆங்கிலேயர் காலத்தில் ராஜபாதை என அறியப்பட்டு வந்த 3 கிமீ பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பெயர் 'கடமை பாதை' என மாற்றப்பட்டது. காலனியாதிக்க சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெயர்மாற்றம் செய்யப்பட்ட கடமை பாதையில் முதல் முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்றது.

ராணுவத்தின் வல்லமையை பறைசாற்றும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன. அர்ஜுன் ரக பீரங்கி, நாக் ஏவுகணை ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

முதன் முறையாக இந்திய கடற்படையைச் சேர்ந்த 144 இளம் வீரர்கள் லெப். கமாண்டர் திஷா அம்ரித் தலைமையில் அணிவகுத்துச் சென்றனர். இதில் பெண்களும், 6 அக்னி வீரர்களும் பங்கேற்றனர்.

ராணுவத்தினரின் அணிவகுப்புக்கு லெப்.ஜெனரல் தீரஜ் சேத் தலைமை வகித்தார். மேஜர் ஜெனரல் பவனிஷ் குமார், அவருக்கு அடுத்தபடியாக சென்றார். பரம்வீர் சக்கரம், அசோக சக்கரம் விருது பெற்றவர்களும் அணி வகுப்பில் பங்கேற்றனர்.

முதன் முறையாக இந்தியா மற்றும் எகிப்து அணியைச் சேர்ந்த ஒருங்கிணைந்த இசைக் குழுவினர் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த குழுவில் 144 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவை கர்னல் முகமது அப்தல் ஃபதா எல் கராஸாவி வழிநடத்தினார்.

அக்னிபாதை திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த முதல் படைப்பிரிவு வீரர்களும் இந்த அணிவகுப்பில் முதன்முறையாக பங்கேற்றனர்.

இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 17 ஊர்திகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.

தமிழ்நாடு, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் - டையூ, குஜராத், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் 17 ஊர்திகள் அணிவகுப்பை அலங்கரித்தன.

சங்ககாலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு அலங்காரி ஊர்தி அமைக்கப்பட்டிருந்த்து. சமூக வளர்ச்சியில் பெண்களின் பங்கை விளக்கும் விதமாகவும் அவை இருந்தன. ஒளவையார், வேலுநாச்சியார், பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்தது.

முன்னதாக சரியாக காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி போர்வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது கருத்துக்களை பதிவிட்டார்.

பின்னர் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும் கடமைப் பாதைக்குச் சென்று அங்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மற்றும் சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் அப்தெல் படாக் அல் சிசி ஆகியோரை வரவேற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com