பிற்படுத்தப்பட்ட பெண், அவரை விட பிற்படுத்தப்பட்ட ஆண்மகனை திருமணம் செய்து கொள்வது கேரளாவில் அதிகம், தமிழ்நாட்டில் குறைவு!

பிற்படுத்தப்பட்ட பெண், அவரை விட பிற்படுத்தப்பட்ட ஆண்மகனை திருமணம் செய்து கொள்வது கேரளாவில் அதிகம், தமிழ்நாட்டில் குறைவு!

தமிழ்நாட்டில் 97 சதவீத பெண்கள் தங்களுடைய சமூகத்திற்குள் திருமணம் செய்து கொள்வதையே விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. ஜாதி பாகுபாடில்லாத சமூக நீதி மாநிலம் என்று சொல்லப்படும் மாநிலத்தில் 3 சதவீத பெண்களே ஜாதி, மதத்தை கடந்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது அதிர்ச்சியான செய்திதான்.

ஐஐபிஎஸ் என்னும் மக்கள் தொகையை ஆய்வு செய்யும் பன்னாட்டு நிறுவனத்தின் ஆய்வுகள், கடந்த பத்தாண்டுகளில் தேசிய அளவில் திருமணங்கள் தொடர்பாக நடந்து வரும் மாற்றங்களை ஆய்வு செய்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, மற்ற தென்னிந்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் ஜாதி, மத மறுப்பு திருமணங்கள் குறைவாக நடைபெறுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் நடைபெறும் திருமணங்கள் பற்றி இந்தியன் கவுன்சில் ஆப் சோஷியல் சயின்ஸ் ரிசர்ச் அமைப்பும் ஒரு ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. அதில் ஏறக்குறைய பத்து சதவீத திருமணங்கள், வேறு சமூகங்களுக்கு இடையே நடைபெறுவதாக அறியப்பட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் ஏறக்குறைய 10 சதவீத சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே நிகழ்கின்றன. ஆனால், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை 8 சதவீத சாதி மறுப்பு திருமணங்கள்தான் நடைபெறுகின்றன.

அதாவது 90 சதவீத இந்தியர்கள் தங்களுடைய சமூகத்திற்குள் திருமணம் செய்து கொள்வதையே விரும்புகிறார்கள். கல்வியறிவு, சமூக நீதி, பெருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைந்த தென்னிந்திய மாநிலங்களில்தான் குறைவான சாதி மறுப்பு திருமணங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரை விட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆண்மகனை திருமணம் செய்து கொள்வது தமிழ்நாட்டில் குறைவு.

தேசிய அளவில் ஒப்பிடும்போது 2 சதவீதத்திற்கும் குறைவான திருமணங்களே தமிழ்நாட்டில் நிகழ்கின்றன. தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், அவரை விட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆண்மகனை திருமணம் செய்து கொள்வது 6 சதவீதமாக இருந்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் இதுவே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கேரளாவில் 12 சதவீதமாக இருந்து வருகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில், தமிழ்நாட்டிற்கு நேர் எதிரான மனநிலை நிலவுகிறது. திருமணம் கடந்த உறவு இன்று நியாயப்படுத்தப்படுகிறது என்றாலும் பெரும்பாலான இந்தியர்கள் திருமணங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமண நடைமுறைகளையும், திருமணச் சட்ட விதிகளும் வெவ்வேறாக இருந்தாலும் திருமணங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை.

மேற்கத்திய நாடுகள் திருமணம் மீதான நம்பிக்கைகளை இழந்து நிற்பதால் சமூகத்தின் சமநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியொரு நிலை, இந்தியாவுக்கு எந்நாளும் வரப்போவதில்லை என்பதை உறுதியோடு சொல்லமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com