ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கிறார் நடிகர் கமல்ஹாசன்!

 ராகுல் காந்தி - கமல்ஹாசன்
ராகுல் காந்தி - கமல்ஹாசன்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் ‘ஒற்றுமை யாத்திரை’யில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க வருமாறு ராகுல் விடுத்த அழைப்பை ஏற்று அதில் கமல் பங்கேற்க உள்ளதாகவும் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி டெல்லியில் இதில் இணைந்து கொள்ள இருப்பதாகவும் கமலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்களை ஒன்று படுத்தும் முயற்சியாக ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில்  தொடங்கிய இந்த யாத்திரை 3,570 கி.மீ. தொலைவு பயணித்து 2023 பிப்ரவரியில் காஷ்மீரில் முடிவடைகிறது.

இந்த யாத்திரை தமிழகம், ஆந்திரம், கேரளம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து இப்போது ராஜஸ்தானுக்கு வந்துள்ளது.

100 நாள்களை நிறைவு செய்துள்ள இந்த யாத்திரையில் அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், நடிகர்கள்,  விளையாட்டு வீரர்கள், முன்னாள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

எட்டுநாள் இடைவெளிக்குப் பிறகு இந்த யாத்திரை வரும் டிசம்பர் 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்குத் தான் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com