அதானி விவகாரம்: தில்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி!

அதானி விவகாரம்: தில்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி!

அதானி விவகாரம் தொடர்பாக புலன்விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி புகார் அளிக்க 18 எதிர்க்கட்சிகள் தில்லியில் நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பிற்பகலில் பேரணியாகச் சென்றனர்.

எனினும் அமாலக்கத்துறை நோக்கி பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சியினரை போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.

அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி மேலும் செல்லமுடியாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியை முடித்துக் கொண்டு நாடாளுமன்றத்துக்கு திரும்பினர். அமலாக்கத்துறையினரிடம் நேரம் கேட்டிருப்பதாகவும் அதன்பின் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டு அவை வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

நாங்கள் 200 பேர் பேரணியாகச் சென்றோம். ஆனால், 2,000 போலீஸார் எங்களை சுற்றிவளைத்து தடுத்து நிறுத்தினர். எங்களது குரல்கள் ஆளுங்கட்சியினரால் ஒடுக்கப்படுகின்றன. ஆனால், ஜனநாயகம் பற்றி அவர்கள் பேசுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாங்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், எங்களில் ஒருவர் இதை ஒரு விவாதத்திலோ, கருத்தரங்கிலோ பேசினால், எங்களை தேச விரோதிகள் என்கின்றனர் என்று கார்கே கூறினார். ராகுல் காந்தி லண்டனில் பேசியதை சுட்டிக்காட்டி அவர் இதை கூறினார்.

எதிக்கட்சிகளின் இந்த பேரணில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை.

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதானி போலியான நிறவனங்களை ஏற்படுத்தி செயற்கையாக பங்குகள் மதிப்பை உயர்த்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.

எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில்லாதவை, இது திட்டமிட்ட தாக்குதலாகும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

பங்கு மார்க்கெட் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு 6 பேர் அடங்கிய நிபுணர்குழுவை உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சில

எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

அதானி விவகாரத்தில் நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நேரத்தில், ராகுல்காந்தியின் லண்டன் பேச்சும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி உள்ளது. இதையடுத்து நாடாளுமன்றம் மூன்று நாட்களாக அமளியால் செயல்படவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com