அடேங்கப்பா!!! ஒரே நேரத்தில் 14 இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்! இதுவல்லவோ சாதனை!
திறமைகளை வெளிப்படுத்த எல்லையே இல்லை. கிளாட்ஸன் பீட்டர் என்பவர் 49 வகையான இசைக்கருவிகளை இசைக்கும் திறன்பெற்றுள்ளார். அவரால் ஒரே நேரத்தில் 14 இசைக்கருவிகளை இசைக்க முடிகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அவர் காசநோயால் அவதிப்படுகிறார். அவரது நுரையீரல் 40 சதவீத அளவுக்கே செயல்படுகிறது. மோசமான உடல்நிலையிலும் அவர் இசையின் மீது உள்ள ஆர்வத்தால் பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் என்பதுதான்.
பீட்டர் ஒரே நேரத்தில் 14 இசைக்கருவிகளை இசைக்கும் இந்த விடியோவை பயண வலைப்பதிவாளரான ஷெனாஸ் டிரெஷரி என்பவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பீட்டர், கிடாரை கையில் வைத்திருக்கிறார். பக்கவாட்டில் இருக்கும் கருவி மூலம் விசில் சத்தம் எழுப்புகிறார் மற்றும் பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கிறார். கால்களில் வயர்களை இணைத்துக் கொண்டு டிரம்ஸ் வாசிக்கிறார். முதுகில் கட்டப்பட்டுள்ள கருவியால் தாளவாத்திய ஒலியை எழுப்புகிறார்.
அந்த விடியோவின் கீழ் “இந்த மனிதருக்கு ஒரே ஒரு நுரையீரல்தான் உள்ளது. 40 சதவீதம் அளவுக்கே நுரையீரல் செயல்படும் நிலையில் காற்று மூலம் ஒலி எழுப்பும் கருவிகளை இசைக்கிறார். தனது இசை மூலம் எல்லோரையும் பரவசப்படுத்துகிறார். நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? அவருக்கு 49 இசைக்கருவிகளை இசைக்கத் தெரியும். அதுவும் ஒரே நேரத்தில் 14 இசைக்கருவிகளை இசைக்கும் திறன் பெற்றவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கின்னஸ் புத்தகத்தில் தமது சாதனை நிச்சயம் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் பீட்டர் இருக்கிறார். ஏனெனில் இந்தியாவில் ஒரே நேரத்தில் 14 இசைக்கருவிகளை இசைக்கும் நபர் என்றால் அது பீட்டர் ஒருவராகத்தான் இருக்கும்.
இணையதள பயனாளர்கள் பலரும் அவரது இசைத் திறமையை வியந்து பாராட்டியுள்ளனர். “கிளாட்ஸன் பீட்டர் உங்களது அசாத்திய திறமைக்கு பாராட்டுகள். விரைவில் உங்கள் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறட்டும்” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
“உலக சாதனை புத்தகத்தில் உங்களது பெயர் இடம்பெற வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்” என்று மற்றொருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
“இசையில் அசாத்திய திறமையுள்ள, ஒரே நேரத்தில் 14 இசைக் கருவிகளை இசைக்கும் உங்களை மதிக்கிறேன்” என்று மூன்றாவது நபர் குறிப்பிட்டுள்ளார்.
“கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் சாதனை நிச்சயம் வரலாற்றில் இடம்பெறும். உங்களுக்கு என் ஆதரவு உண்டு. இந்த விடியோவை பகிர்ந்த ஷென்னுக்கு நன்றி” என்று நான்காவது நபர் கருத்து வெளியிட்டுள்ளார்.