அமெரிக்க தொழிலதிபரின் பேச்சு, இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம்!
இந்திய ஜனநாயகத்தை தகர்க்கவும், பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் முயற்சிப்பதாகக் கூறி அவர் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் சோர்ஸ், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாகவும், அதானி-மோடி இருவரையும் தொடர்பு படுத்தியும், இந்தியா பற்றியும் தெரிவித்திருக்கும் கருத்துக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதானி குழும்ம் பங்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் சரியத் தொடங்கின. இதனால் அதானி குழுமத்துக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், மோடியும் அதானியும் நெருக்கமானவர்கள். அவர்களது வளர்ச்சி ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஆனால், அதானி மோசடி விவகாரத்தில் மோடி ஏனோ
அமைதி காத்து வருகிறார். சர்வதேச முதலீட்டாளர்களின் கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும். ஆனால், தவிர்த்து வருகிறார். அதானி குழுமத்தின் சரிவு, மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஆனால், இது ஒருவகையில் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜ் சோரஸின் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட ஆதாயத்துக்காக ஜார்ஜ் சோரஸ், இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்க விரும்புகிறார். குறிப்பாக மோடியை குறிவைத்து 1 பில்லியன் டாலர் நிதி உதவி அறிவித்துள்ளார். இந்தியாவில் தனக்கு சாதகமானவர்களை ஆட்சியை அமர்த்தும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்.
இங்கிலாந்து வங்கியை சரிவுக்கு தள்ளியதால் பொருளாதார போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜார்ஜ் சோரஸ் இப்போது இந்திய ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க நினைக்கிறார். இந்தியா உலகில் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கும் நிலையில் அவர் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்திய உள்விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் அன்னிய சக்திகளை இந்திய மக்கள்
ஒன்றிணைந்து முறியடிப்பார்கள் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.