தில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

தில்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 இடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றது. பா.ஜ.க. 104 இடங்களுடன் இரண்டாவது இடத்தை பெற்றது.

இந்த நிலையில் மேயர் தேர்தலுக்கு முன்பு 10 நியமன உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நியமித்தார். இதனிடையே நியமன உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்வதன் மூலம் தில்லி மாநகராட்சியை கைப்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

இதனால் மாமன்ற கூட்டத்தில் பா.ஜ.க - ஆம் ஆத்மி கட்சியினரிடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களில் மேயர் தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தில்லி மேயர் தேர்தலை முறையாக நடத்த உத்தரவிடக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மேயர் தேர்தலுக்கு பிறகு அவரது தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

தில்லி துணைநிலை ஆளுநரும், பா.ஜ.க.வும் எப்படி சட்டவிரோதமாக செயல்பட்டனர் என்பதை உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளதாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

ஜனநாயகம் வென்றுள்ளது. தில்லி துணை நிலை ஆளுநர் தமது சட்டவிரோத செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், பதவியையும் ராஜிநாமாச் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா வலியுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com