சமூக ஊடகங்களில் டிரெண்டிங் வீடியோ போடும் ஆசையில் ஏடாகூடம் செய்வோர் கவனத்துக்கு!
சமூக ஊடகத்தில் வீடியோ டிரெண்ட் ஆக வேண்டும் என்ற நோக்கில் சிலர் கவர்ச்சியாக நடனமாடி வீடியோ வெளியிடுகிறார்கள், சிலரோ வரம்பின்றி பிராங்க் செய்து பொதுமக்களை அச்சுறுத்தி வீடியோ வெளியிடுகிறார்கள். சிலர் கெட்ட வார்த்தைகளில் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டு சண்டை சச்சரவில் ஈடுபடுவதைப் போல படமாக்கி வீடியோ வெளியிடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை அது கன்டென்ட். ஆனால், விஷயம் தெரியாதவர்கள் அதை நிஜம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியதாகிறது.
இப்படித்தான் தமனா என்கிற வினோதினி எனும் இளம்பெண் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி அந்தப் பெண்ணைப் பெரிய பிரச்சனையில் சிக்க வைத்திருக்கிறது. அதற்காகத் தன்னிலை விளக்கம் அளித்து தமனா வெளியிட்ட வீடியோவில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால்;
கையில் சிகரெட் மற்றும் பட்டாக்கத்தியுடனும் பெண் ரவுடி போன்ற தோற்றத்துடனும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி தமனா வெளியிட்டிருந்த அந்தப் பழைய வீடியோவை, இப்போது புதிதாக வெளியான வீடியோவாகக் கருதிக் கொண்டு காவல்துறையினர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை காவல்நிலையத்தில் கொண்டு போய் அடைத்து வைத்து தன்னைப் பற்றி விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், தன்னைப் பிடித்துக் கொடுத்தால் அதாவது தமனாவாகிய தன்னைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தால் மட்டுமே அவர்களை எல்லாம் வெளியில் விடுவோம் என்று காவல்துறை அச்சுறுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.
மேலும் அவர் கூறியதில் இருந்து;
அந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பழைய வீடியோ, வீடியோவை நன்றாகக் கவனித்தால் தெரியும். அதில் இருக்கும் தனது தோற்றத்துக்கும், இப்போதைய தனது தோற்றத்துக்குமான மிகப்பெரிய வேறுபாடு. அது மட்டுமல்லாமல், அன்று அந்த மோசமான வீடியோ வெளியிட்டதற்கான தண்டனையாக அப்போதே தன்னை கஞ்சா வழக்கில் கைது செய்து காவல்துறை தண்டித்து விட்டது என்றும். இப்போது அந்தக் குற்றச்சாட்டில் இருந்து வெளிவந்து தான் நிம்மதியாக இருப்பதாகவும், இப்போது போய் பழைய வீடியோவை புதுசு போல எண்ணிக் கொண்டு தன்னைச் சேர்ந்தோரை காவல்துறை அச்சுறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
தற்போது கடந்த 6 மாதங்களுக்கு முன் தனக்குத் திருமணமாகி அதன் அடையாளமாக வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டு கணவருடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் போது பழைய வீடியோவால் இப்படி ஒரு பிரச்சனை வந்தால் நான் என்ன செய்வது? நான் இப்போது அப்படியான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறேன். இப்போது காவல்துறை என் மீது இப்படி நடவடிக்கை எடுக்கலாமா? நீங்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.- என்று பார்வையாளர்களிடம் நியாயம் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?
கையில் ஒரு ஹைடெக் ஃபோன் கிடைத்து விட்டது என்று எண்ணி விதம் விதமாக சமூக ஊடகப் பைத்தியத்தில் வித்தியாசமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு விகாரமாகவோ அல்லது பிரச்சனைக்குரியதாகவோ ஏதேனும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பதிவு செய்து வைத்து உங்களுக்கு நீங்களே விரோதி ஆகிக் கொள்ளாதீர்கள் என்பதைத் தான் நாம் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவை காலத்தால் அழியாத ஆதாரங்களாகி வருடங்கள் கடந்தும் இப்படி நமக்கு ஆப்பு வைத்து விடக்கூடும்.
அதனால் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடும் போது இனிமேலாவது ஜாக்கிரதையாக இருங்கள்.