தானத்தில் சிறந்தது ஜாமீன் நிதி தானம் - ஒரு கைதியின் கடிதம்!

தானத்தில் சிறந்தது ஜாமீன் நிதி தானம் - ஒரு கைதியின் கடிதம்!

டெல்லி சிறையில் உள்ள சர்ச்சைக்குரிய கைதியான சுகேஷ் சந்திரசேகர், தன்னுடைய பிறந்த நாள் பரிசாக 5 கோடி ரூபாயை கைதிகளுக்கு ஜாமீன் நிதி தரவிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஏராளமான நடிகைகளையும், அரசியல்வாதிகளையும் ஏமாற்றியிருப்பதாக புகாருக்கு உள்ளாகியிருக்கும் சுகேஷ், கைதிகளுக்காக உருகியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்திருப்பதாக குற்றம் சாட்டடப்பட்டார். 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தவிர இரட்டை இலைச் சின்னம் லஞ்சம் தொடர்பாகவும் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் சொகுசு வாழ்க்கையை தொடர்ந்ததற்காக டெல்லி அமைச்சர்களுக்கு பல கோடிருபாய் லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அதனால் திகார் சிறையில் இருந்து, டெல்லி மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்தாலும் சுகேஷ் எப்போதும் சர்ச்சைகளுடன் இருந்து வந்திருக்கிறார். குறிப்பாக ஆம் ஆத்மி மீதும் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளர்க்க வேண்டும் என்று தன்னை நிறைய பேர் அணுகியதாகவும்,எம்.பி பதவி தருவதாகவும் குறிப்பிட்டதாக பேசியிருந்தார்.

சமீபத்தில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் விரைவில் அரவிந்த் கேஜ்ரிவாலும் சிக்குவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விசாரணைக் கைதிகளின் குடும்பங்களுக்கு யாரும் உதவு முயற்சியெடுப்பதில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்து உறவினர்கள் தற்கொலைக்கு கூட முயன்றிருக்கிறார்கள்.

ஆதரவற்ற கைதிகளுக்கு ரூ.5 கோடியே 11 லட்சம் நிதி வழங்க இருக்கிறேன். இது முறையான வருவாய் மூலம் வந்த எனக்கு கிடைத்த நிதியாகும். குற்றப்பின்னணியில் வந்தது அல்ல. அதற்கான ஆதாரங்களை காட்டுகிறேன். மார்ச் 25-ந் தேதி என்னுடைய பிறந்தநாள் என்பதால் எனது பிறந்தநாள் பரிசாக சிறைத்துறைக்கு அளிப்பதாக எழுதியிருக்கிறார்.

சாரதாம்மா தொண்டு நிறுவனம் மற்றும் சந்திரசேகர் புற்றுநோய் அறக்கட்டளை மூலம் பல நலத்திட்டங்களில் நானும், என் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளோம். ஏழை நோயாளிகளுக்கு மாதம்தோறும் இலவச ஹீமோதெரபியும் அளிக்கிறோம். ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனது

இதயம் வலிக்கிறது. ஆகவே, என்னால் இயன்ற உதவியை செய்ய நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ஏறக்குறைய 5 ஆண்டுகாலமாக பல்வேறு சிறைகளில் உள்ள சுகேஷ், இதுவரை 400க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற்ற வெளிவர உதவி செய்திருப்பதாக கூறப்படுகிறது. எத்தனையோ தானங்களில், இதுவொரு தானம். இவையெல்லாம் சுகேஷை சிறையிலிருந்து விடுதலையாக உதவி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com